ஹாலிவுட் படங்களிலிருந்து கதையை சுட்டு அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றி படங்களை எடுப்பது என்பது எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து இருக்கிறது. எம்ஜிஆர் நடித்த அன்பே வா திரைப்படம் கூட கம் செப்டம்பர் என்கிற ஒரு ஆங்கில படத்தின் தழுவல்தான். இப்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் ரசிகர்கள் அதை சுலபமாக கண்டுபிடித்து விடுகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உருவான லியோ திரைப்படம் கூட 2005ம் வருடம் வெளியான என் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான். அந்த படத்தில் கேங்ஸ்டராக இருக்கும் ஹீரோ அதை விட்டுவிட்டு தனது குடும்பத்திற்காக அமைதியாக வாழ்க்கையை வாழ முடிவெடுத்து ஒரு காபி ஷாப் நடத்திக் கொண்டிருப்பார். அங்கு இரண்டு கேங்ஸ்டர்கள் வந்து பிரச்சனை செய்ய சூழ்நிலை காரணமாக ஹீரோ அவர்களை சுட்டு கொன்று விடுவார். அதன்பின் ஹீரோ சென்று வில்லனை அழிப்பார். லியோ படத்தின் கதையும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தின் கதையும் இந்த The Outfit என்கிற ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என சொல்லப்படுகிறது. போலீஸ் அதிகாரியாகவோ அல்லது கேங்ஸ்டராவோ இருந்த ரஜினி தனது குடும்பத்திற்காக அதை எல்லாம் விட்டுவிட்டு அமைதியாக ஒரு டைலர் தொழிலை செய்து கொண்டிருப்பார். அப்போது அவரின் வாழ்க்கையில் மீண்டும் கேங்ஸ்டர்கள் வர குடும்பத்திற்காக அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.
தலைவன் 173 தொடர்பாக படக்குழு வெளியிட்ட போஸ்டரை பார்த்தால் அதில் டைலர்கள் பயன்படுத்தும் கத்திரிக்கோல், துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது இந்த படமும் ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த கேங்ஸ்டர் படமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.
