தீபாவளி ரேஸில் 4 பெரிய படங்கள்!.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எல்.ஐ.கே..

#image_title
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் தங்களின் படங்கள் தீபாவளி பண்டிகையில் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஏனெனில், தீபாவளியன்று வெளியாகும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறும். அதனால் படம் ஹிட் அடித்துவிடும் என்பதே கணக்கு.
பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்பதால் சின்ன நடிகர்களின் படங்கள் அன்று வெளியாகாது. அதற்கு காரணம் பெரிய படங்களுக்கே பெரும்பாலான தியேட்டர்கள் ஒதுக்கப்படும். இதனால் சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது. முன்பெல்லாம் தீபாவளி பண்டிகையின் போது ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களும் வெளியாகி எல்லாமே ஹிட் அடிக்கும்.

அதற்கு காரணம் அப்போது தியேட்டர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. இப்போது அதில் 50 சதவீத தியேட்டர்கள் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில், இந்த வருட தீபாவாளிக்கு என்னென்ன தமிழ் படங்கள் வெளியாகிறது என பார்ப்போம். இப்போது வரை தீபாவளி ரேஸில் 4 படங்கள் இருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தேவிட்டார்கள். இது தூத்துக்குடியில் பகுதியில் வசிக்கும் ஒரு நிஜ கபடி வீரரின் வாழ்க்கை கதை என சொல்லப்படுகிறது. வழக்கம்போல் இந்த படத்திலும் கீழ்த்தட்டு மக்கள் சந்திக்கும் சாதிய அடக்குமுறைகளை மாரி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படமும் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் திரிஷாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த படம் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் அடிக்குமா என தெரியவில்லை.

அதேபோல், மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படமும் தீபாவளி ரிலீஸை குறி வைத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான சர்தார் படம் ஹிட் ஆன நிலையில் இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே படத்தையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படி 4 படங்கள் தீபாவளி ரேஸில் இருந்தாலும் கடைசி நேரத்தில் சில படங்கள் பின் வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.