ஒரு வாரத்துல 3 பிளாப் படங்கள்...இப்படியே போனா மார்கெட் நிலைக்குமா?...
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் நண்பர்களில் ஒருவராக சிறுசிறு வேடங்களில் நடித்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஜய் சேதுபதி.
அதன்பின் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘பீட்சா’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர, மற்ற இயக்குனர்களின் கவனமும் இவர் மீது திரும்பியது.
அதன்பின் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடிப்பதே விஜய் சேதுபதியின் ஸ்பெஷல். சூது கவ்வும், ஆண்டவன் கட்டளை, பண்ணையாரும் பத்மினியும் என வித்தியாசம் காட்டினார்
விஜய் சேதுபதி. இவரின் நடிப்பும், இவர் நடித்த திரைப்படங்களும் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போக தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க துவங்கினார். நண்பர்களுக்காக ஹீரோவாக மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடம், கெஸ்ட் ரோல் என எது கிடைத்தாலும் நடிக்க துவங்கினார்.
மாஸ்டர் படம் மூலம் தனக்கு வில்லனாகவும் மிரட்ட தெரியும் என நிரூபித்தார். விளைவு சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் ஒப்பந்தம் ஆனார். சில ஹிந்தி வெப்சீரியஸிலும் நடிக்கவுள்ளார். மொத்தத்தில் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் ஹீரோவாக அவர் மாறியுள்ளார். பல வருடங்களுக்கு அவரின் கால்ஷீட் ஃபுல்லாக இருக்கிறது. தொடர்ந்து அவரின் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.
ஆனால், இந்த திரைப்படங்களை பார்க்கும்போது விஜய் சேதுபதி பணத்திற்காக தடம் மாறிவிட்டாரோ என்கிற கேள்வி எழுகிறது. ஒரு திரைப்படத்திற்கு ரூ.10 கோடி வரை அவர் சம்பளம் பெறுகிறார். எனவே, கிடைக்கும் எல்லா படங்களிலும் நடித்து தள்ளுகிறார்.
அது நல்ல கதையா? ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பதையெல்லாம் அவர் யோசிக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பல கோடி செலவில் ஒரு புதிய வீட்டை கட்ட அவர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே அவர் இப்படி இடைவெளியில்லாமல் நடித்து வருவதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அவர் நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி என அவர் நடிப்பில் 3 திரைப்படங்கள் வெளியாகி விட்டது. மூன்று திரைப்படங்களுமே ரசிகர்களை கவரவில்லை. லாபம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி காத்து வாங்கியது.
இப்படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம். 3 திரைப்படங்களுமே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படங்களை கழுவி ஊற்றினர்.
ஏற்கனவே, விஜய் சேதுபதி ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்காமல் இப்படி பணத்திற்காக மட்டும் விஜய் சேதுபதி நடிக்க துவங்கினால் விரைவில் அவரின் மார்கெட் சரியும் என சினிமா விமர்சகர்கள் கூற துவங்கியுள்ளனர்.
விழித்துக்கொள்வாரா விஜய் சேதுபதி?....