ஒரே கதையில் வெளியான மூன்று படங்கள்! - அட எல்லாமே ஹிட்டு!...
திரைத்துறையை பொருத்தவரை ஒரு மொழியில் உருவான திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தால் அதை வேறு மொழியிலும் எடுப்பார்கள். பல ஹிந்தி படங்களின் கதையில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கூட நடித்திருக்கிறார்கள். பல ஹாலிவுட் படங்களின் கதையை தமிழுக்கு ஏற்றதுபோல் கொஞ்சம் மாற்றி எம்.ஜி.ஆரே சில படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், ஹிந்தியில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட சில நடிகர்கள் நடித்து ஹிட் அடித்த படங்களை இங்கே ரஜினி, கமல் நடித்துள்ளனர். அதேபோல், தமிழில் ஹிட் படத்த பல படங்களை ஹிந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து எடுத்துள்ளனர். இப்படி பல படங்கள் உருவாகியுள்ளது.
அதேமாதிரி, தமிழ் சினிமாவில் ஒரே கதையில் பல படங்கள் உருவாகியுள்ளது. அதில், சில கதைகள் கொஞ்சம் மாறும். சில படங்களின் கதை அப்படியே ஒரே மாதிரி இருக்கும். வேறு ஹீரோ, வேறு வில்லன் நடித்திருப்பார் அவ்வளவுதான் வித்தியாசம். அப்படி உருவான மூன்று படங்களைத்தான் இங்கே பார்க்க போகிறோம்
கதை என்னவெனில், ஊருக்கெல்லாம் நன்மை செய்யும் ஹீரோ. அவருக்கு ஒரு தங்கை இருப்பார். சந்தர்ப சூழ்நிலையில், வில்லனின் குடும்பத்தில் ஒருவரை ஹீரோவின் தங்கை திருமணம் செய்து கொள்வார். தங்கச்சி படும் கஷ்டத்தை சகித்து கொள்ளவும் முடியாமலும், வில்லன்களை எதுவும் செய்ய முடியாமலும் ஹீரோ தவிப்பார். கடைசியில் இந்த பிரச்சனையில் இருந்து ஹீரோ எப்படி மீண்டார் என்பதுதான் கிளைமேக்ஸ்.
சத்தியராஜ் நடிப்பில் நூறாவது படமாக வெளிவந்த திரைப்படம் ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’. இந்த படத்தை பி.வாசு இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். அடுத்து, கே.பாக்கியராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான சொக்கத்தங்கம். அதே படத்திலும் இதுதான் கதை. விஜயகாந்துக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருப்பார். தேவா இசையமைத்திருந்தார். அதேபோல், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டு பிள்ளை. இதில், சிவகார்த்திகேயனின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும், அவரின் கொடுமைக்கார கணவராக சதுரங்க வேட்டை நடராஜும் நடித்திருப்பார்கள்.
அதாவது வாத்தியார் வீட்டு பிள்ளை படத்தில் நாசரும், சொக்கத்தங்கம் படத்தில் பிரகாஷ்ராஜும், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடராஜும் ஒரே கதபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதே போல ஒரே கதையில் தமிழில் பல படங்களில் வெளியாகியிருக்கிறது.