ராமராஜனை கோடீஸ்வரனாக மாற்றிய கரகாட்டக்காரன்!.. செம பிளாஷ்பேக்!...
karakattakaran: கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி செந்தில், கோவை சரளா, காந்திமதி , சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்து 1989ம் வருடம் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். ராமராஜனின் சினிமா கெரியரில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்து, அவரை ஒரு வசூல் மன்னன் என திரையுலகுக்கு காட்டியது.
இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும். பாடல்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
கரகாட்டக்காரன் ராமராஜனை ஒரு கோடீஸ்வரனாக மாற்றியது என்பது பலருக்கும் தெரியாது. இந்த படத்திற்காக ராமராஜனுக்கு பேசப்பட்ட சம்பளம் 7 லட்சம். இந்த படம் 5 வாரம், அதிகபட்சம் 7 வாரங்கள் ஓடி சுமாரான வெற்றியைப் பெறும் என்றே ராமராஜன் நினைத்தார். ஆனால் அவரே எதிர்பார்க்காத மேஜிக் இந்த படத்தில் நடந்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தார்கள். இதை ராமராஜன் மட்டுமல்ல, தயாரிப்பாளர், இயக்குனர், படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

பல நடிகர்களின் சாதனையை இப்படம் முறியடித்தது. ரஜினி, கமல் கூட இந்த படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். பட்டிதொட்டியெங்கும் இப்படம் பற்றி மக்கள் பேசினார்கள். கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் படம் பார்த்தார்கள். பல ஊர்களில் கரகாட்டக்காரன் படம் ஓடும் தியேட்டர் அருகில் பேருந்து நின்றது. அதை கரகாட்டக்காரன் பஸ் ஸ்டாப் என்று அழைத்தார்கள். மதுரையில் ஒரு தியேட்டரில் கரகாட்டக்காரன் ஒரு வருடம் ஓடியது. இப்படத்தை கருமாரி கந்தசாமி என்பவர் தயாரித்திருந்தார்.
துவக்கத்தில் இந்த படத்தை பார்க்க விநியோகஸ்தர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அப்போது ஆக்சன் படங்கள் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே ஒரு கிராமத்திய நகைச்சுவை படம் வெற்றி பெறும் என அவர்கள் நம்பவில்லை. எனவே, மிகவும் குறைவான விலைக்கு இப்படத்தை வாங்கினார்கள். ஆனால், அதைவிட பல மடங்கு லாபத்தை கரகாட்டக்காரன் சம்பாதித்து கொடுத்தது. 7 லட்சம் சம்பளத்திற்கு பதிலாக சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு ஏரியாக்களின் வினியோக உரிமையை ராமராஜன் எழுதி வாங்கினார்.

ஆனால் பணத்தேவை இருந்ததால் சென்னையில் சில ஏரியாக்களை ஒரு பத்திரிகையாளரிடம் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். தொடர்ந்து எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. எனவே, 70 ஆயிரம் கொடுத்து படத்தை வாங்கிய அந்த நபருக்கு 5.75 லட்சம் லாபம் கிடைத்தது. அப்படியென்றால் சென்னையில் மற்ற பகுதிகள் மற்றும் மதுரை ஆகிய ஏரியாக்களில் ராமராஜனுக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என யோசித்து பாருங்கள்.
கிட்டத்தட்ட இந்த படம் அவருக்கு சில கோடிகளை சம்பாதித்து கொடுத்தது. அதுவும் மதுரை எனும் மாபெரும் ஏரியாவை அவர் கையில் வைத்திருந்ததால் அவர் அவர் பல கோடி லாபம் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது அவருக்கு மட்டுமல்ல.. படத்தை வாங்கி வெளியிட்டு விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என எல்லோருமே பணத்தை அள்ளிச் சென்றார்கள்..
கரகாட்டக்காரனுக்கு பின் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் மதுரை உள்ளிட்ட சில ஏரியாக்களை எழுதி வாங்கிக் கொண்டார் ராமராஜன். அதன் மூலமும் அவர் பல கோடிகளை சம்பாதித்தார் என்கிறது சினிமா வட்டாரம்.
