ஒரே தீபாவளியில் விஜயகாந்துக்கு 2 சத்யராஜுக்கு 2 பிரபுவுக்கு 2... இயக்குநர்களுக்கும் 2!- 1986ல் நடந்த அதிசயம்
தமிழ் சினிமாவுக்கும் தீபாவளிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. பெரிய நடிகர்களின் படங்கள் மோதுவதும், ஒரே நாளில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து வைப்பதும் வழக்கம். ஆனால் 1986-ம் ஆண்டு தீபாவளி இதில் மிகவும் விசேஷமாக அமைந்தது.
அந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிவாஜி கணேசன், சத்யராஜ், பிரபு என அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் களமிறங்கின. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நடிகருக்கு இரண்டு படங்கள் என்பது மட்டுமல்லாமல், நடிகர்கள் முதல் இயக்குநர்கள் வரை பலருக்கும் ஒரே தீபாவளி சீசனில் தலா இரண்டு படங்கள் வெளியாகின.
அந்த மறக்க முடியாத 1986 தீபாவளி ரிலீஸ்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. மாவீரன் –
ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ராஜசேகர் இயக்கிய படம் மாவீரன் . ரஜினிகாந்துடன் அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். 1985-ல் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்திப் படமான மர்த் படத்தின் தமிழ் ரீமேக்காக மாவீரன் உருவானது. 1986 நவம்பர் 1-ம் தேதி படம் வெளியானது. தமிழ் சினிமாவில் 70 எம்.எம். வடிவம் மற்றும் ஆறு டிராக் ஸ்டீரியோ ஒலியுடன் வெளியான ஆரம்பகால முக்கிய முயற்சியாகவும் மாவீரன் குறிப்பிடப்படுகிறது. ரஜினி தயாரித்த முதல் படம் இது. இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்தப் படத்தை இயக்கிய ராஜசேகருக்கு அந்த தீபாவளியில் இன்னொரு படமும் இருந்தது. அதுதான் லட்சுமி வந்தாச்சு .
2. புன்னகை மன்னன் –
1986 தீபாவளியின் மிக முக்கியமான படங்களில் ஒன்று கமல்ஹாசனின் புன்னகை மன்னன் . கே.பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், ரேவதி, ரேகா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கமல் சேது மற்றும் சாப்ளின் செல்லப்பா என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். காதலில் தோல்வியடைந்து தனது காதலியுடன் தற்கொலைக்கு முயலும் சேது உயிர் பிழைக்கிறார்; காதலி உயிரிழக்கிறார். அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் வாழும் அவருடைய வாழ்க்கையில் மற்றொரு பெண் வரும்போது என்ன நடக்கிறது என்பதே படத்தின்கதை. இளையராஜாவின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக இசையில் அப்போது புதிய தொழில்நுட்ப முயற்சிகளும் பயன்படுத்தப்பட்டன. படம் தீபாவளி நாளான நவம்பர் 1-ல் வெளியாகி 25 வாரங்களுக்கும் மேலாக ஓடி சில்வர் ஜூப்ளி வெற்றியைப் பெற்றது.
இதில் நடித்த ரேவதிக்கு அதே தீபாவளியில் இன்னொரு படமும் இருந்தது. அது லட்சுமி வந்தாச்சு .
3. அறுவடை நாள் –
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான அறுவடை நாள் , இயக்குநர் ஜி.எம்.குமாரின் அறிமுகப் படம். பிரபு, பல்லவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். வடிவுக்கரசி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றனர். இசை இளையராஜா. பிரபுவின் அண்ணன் ராம்குமார் நடித்த ஒரே படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் ஒரு இளம் பெண் கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு அவரது வாழ்க்கையில் ஏற்படும் காதலும், அதைத் தொடர்ந்து உருவாகும் குடும்பச் சிக்கல்களுமே படத்தின் மையம். கிராமத்துப் பின்னணியில் காதல், குடும்ப உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை மையப்படுத்திய இப்படம் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியானது. பின்னர் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதில் கதாநாயகனாக நடித்த பிரபுவுக்கு அதே தீபாவளியில் இன்னொரு முக்கியமான படமும் இருந்தது. அதுதான் பாலைவன ரோஜாக்கள் . இந்த இரண்டு படங்களுமே நலல் வெற்ற்றியை பெற்றன.
4. தழுவாத கைகள் –
விஜயகாந்த் நடித்த தழுவாத கைகள் படத்தை ஆர்.சுந்தர்ராஜன் எழுதி இயக்கினார். விஜயகாந்துடன் அம்பிகா, அனுராதா, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்தார். காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட ரொமான்டிக் டிராமாவாக உருவான இப்படம் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியானது. விஜயகாந்துக்கு அந்த தீபாவளியில் வெளியான முதல் படம் இது என்றால், மற்றொன்று தர்ம தேவதை . ஆச்சரியமாக விஜயகாந்தின் இரண்டு படங்களின் பெயர்களுமே த என்ற எழுத்தில் தொடங்கின. இதில் தழுவாத கைகள் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
5. தர்ம தேவதை –
ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் தர்ம தேவதை . விஜயகாந்த், சரத்பாபு, ராதிகா, பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரவீந்திரன் இசையமைத்திருந்தார். தொழிலாளர்களுக்காகப் போராடும் தனது சகோதரரை இழக்கும் விஜயகாந்த், அதன்பின்னர் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக எப்படிப் போராடுகிறார் என்பதை மையமாகக் கொண்ட ஆக்ஷன் - குடும்பக் கதையாக படம் அமைந்தது. தெலுங்கில் வெளியான பிரதித்வனி படத்தின் ரீமேக்காக இது உருவாக்கப்பட்டது. இந்த படம் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது.
6. லட்சுமி வந்தாச்சு –
மாவீரன் படத்தை இயக்கிய ராஜசேகரின் மற்றொரு தீபாவளி வெளியீடு லட்சுமி வந்தாச்சு. சிவாஜி கணேசன், பத்மினி, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரவீந்திரன் இசையமைத்தார். குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பான பெண்மணிக்கும், அந்த வீட்டிற்குள் வரும் கலகலப்பான இளம் பெண்ணுக்கும் இடையே உருவாகும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் படம் பேசியது. 1980-ல் வெளியான இந்திப் படமான கூப்சூரத் படத்தின் தமிழ் ரீமேக்காக இது உருவானது. ரேவதி லட்சுமியாக நடித்திருந்தார். இந்த படமும் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது.
7. பாலைவன ரோஜாக்கள்
1986 தீபாவளியில் வெளியான மற்றொரு குறிப்பிடத்தக்க திரைப்படம் பாலைவன ரோஜாக்கள் . மணிவண்ணன் இயக்கிய இப்படத்திற்கு மு.கருணாநிதி திரைக்கதை எழுதியிருந்தார். சத்யராஜ், பிரபு, லட்சுமி, நளினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்தார். மலையாளத்தில் வெளியான வார்த்தா திரைப்படத்தைத் தழுவி உருவான இப்படம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழல் அரசியலை மையப்படுத்திய அரசியல் படமாக அமைந்தது.
சத்யராஜ் பத்திரிகையாளர் சபாரத்தினமாக நடித்திருந்தார். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழலை வெளிக்கொண்டு வர முயலும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை படம் பேசியது. நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இதில் சத்யராஜுக்கும் பிரபுவுக்கும் அன்றைய தீபாவளி கணக்கு ரெண்டு ஆனது.
பிரபு – அறுவடை நாள், பாலைவன ரோஜாக்கள் . சத்யராஜ் – பாலைவன ரோஜாக்கள் , விடிஞ்சா கல்யாணம் .
8. விடிஞ்சா கல்யாணம் –
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த மற்றொரு 1986 தீபாவளி சீசன் திரைப்படம் விடிஞ்சா கல்யாணம் . ஜெயஸ்ரீ, சுஜாதா, விஜயகுமார், ரவீந்திரன், செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் சிறையிலிருந்து தப்புகிறார். மற்றொரு பக்கம் ஒரு வீட்டில் நடக்கும் கொலை மற்றும் அதை மறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என திரில்லர் பாணியில் இப்படத்தின் கதை நகர்கிறது. இதன் மூலம் இயக்குநர் மணிவண்ணனுக்கும் அந்த சீசனில் இரண்டு படங்கள் — பாலைவன ரோஜாக்கள் மற்றும் விடிஞ்சா கல்யாணம் .
ஆக 1981ம் ஆண்டு தீபாவளிக்கு
விஜயகாந்த் – தர்ம தேவதை + தழுவாத கைகள்
இயக்குனர் ராஜசேகர் – மாவீரன் + லட்சுமி வந்தாச்சு
ரேவதி – புன்னகை மன்னன் + லட்சுமி வந்தாச்சு
பிரபு – அறுவடை நாள் + பாலைவன ரோஜாக்கள்
சத்யராஜ் – பாலைவன ரோஜாக்கள் + விடிஞ்சா கல்யாணம்
மணிவண்ணன் – பாலைவன ரோஜாக்கள் + விடிஞ்சா கல்யாணம்
