2002 தீபாவளியில் மோதிய விஜயகாந்த், விஜய், அஜித்... ஒரே நாளில் வெளியான 5 படங்கள்!

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத தீபாவளிகளில் ஒன்று 2002ஆம் ஆண்டு தீபாவளி. அன்றைய முன்னணி நடிகர்களான விஜய், அஜித் குமார், விஜயகாந்த் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன
 
2002 diwali movie list

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத தீபாவளிகளில் ஒன்று 2002ஆம் ஆண்டு தீபாவளி. அன்றைய முன்னணி நடிகர்களான விஜய், அஜித் குமார், விஜயகாந்த் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. அதோடு சிலம்பரசன், சேரன் நடித்த படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.

2002ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அந்த தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்தின்  ரமணா, விஜய்யின்  பகவதி , அஜித்தின் வில்லன் ,  சிலம்பரசனின்  காதல் அழிவதில்லை , சேரனின்  சொல்ல மறந்த கதை  ஆகிய ஐந்து திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைக்களங்களில் உருவாகியிருந்ததால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 விஜய்யின் பகவதி

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம்  பகவதி . இதில் விஜய்க்கு ஜோடியாக ரீமா சென் நடித்திருந்தார். மேலும் ஜெய், வடிவேலு, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனது தம்பியின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் அண்ணன், தம்பிக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குப் பிறகு எடுக்கும் அதிரடி முடிவுகளே படத்தின் கதையாக அமைந்திருந்தது. விஜய் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்த காலகட்டத்தில் வெளியான முக்கியமான படங்களில்  பகவதியும் ஒன்று. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளும், விஜய்யின் அதிரடி சண்டைக் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. தேவாவின் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்தன. 

அஜித்தின் வில்லன்

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம்  வில்லன் . இதில் மீனா, கிரண் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் சுஜாதா, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அஜித், சிவா மற்றும் விஷ்ணு என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். குறிப்பாக மாற்றுத்திறனாளியாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. வித்யாசாகர் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

2002 தீபாவளி வெளியீடுகளில் வணிகரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில்  வில்லன்  முக்கியமானதாக அமைந்தது.

 விஜயகாந்தின் ரமணா

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்  ரமணா . இதில் ஆஷிமா பல்லா கதாநாயகியாக நடித்திருந்தார். சிம்ரன் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஊழலுக்கு எதிராகப் போராடும் கல்லூரிப் பேராசிரியரின் கதையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை ஒழிக்க ரமணா மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக மருத்துவமனையில் நடைபெறும் ஊழலை அம்பலப்படுத்தும் காட்சி இன்றளவும் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் காட்சிகளில் ஒன்றாக உள்ளது. விஜயகாந்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக  ரமணா அமைந்தது. சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. இளையராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு உதவியது. வழக்கமான விஜயகாந்த் படமாக இல்லாமல் வித்யாசமான விஜயகாந்தை திரையில் பார்த்தது ரைச்கர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சிலம்பரசனின் காதல் அழிவதில்லை

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் இயக்கத்தில் அவரது மகன் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம்  காதல் அழிவதில்லை . இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக சார்மி கவுர் நடித்திருந்தார். மேலும் டி.ராஜேந்தர், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்திருந்த சிலம்பரசன், கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் இதுதான். காதல், குடும்ப எதிர்ப்பு, இளைஞர்களின் உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.
படத்தின் பாடல்கள் இளைஞர்களிடையே கவனத்தைப் பெற்றன. சிலம்பரசனின் கதாநாயகன் பயணத்திற்கு அடித்தளம் அமைத்த திரைப்படமாக இது அமைந்தது. ஆனால் இப்படம் வ்ருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

 சேரனின் சொல்ல மறந்த கதை

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடித்த திரைப்படம் சொல்ல மறந்த கதை . இதில் ரதி கதாநாயகியாக நடித்திருந்தார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின்  தலைகீழ் விகிதங்கள்  நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. கிராமப்புற வாழ்க்கை, குடும்ப உறவுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தன்மானம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்திருந்தது. வழக்கமான மசாலா திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு யதார்த்தமான கதைக்களத்துடன் வெளியான இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

2002ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஐந்து திரைப்படங்களில் விஜயகாந்தின்  ரமணா  மற்றும் அஜித்தின்  வில்லன் ஆகியவை மிக முக்கியமான வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் வசூலில் ரமணா முதலிடத்தை பெற்றது. 3ம் இடத்தை பகவதியும், நான்காம் இடத்தை சொல்ல மறந்த கதையும் பிடித்தன. 

From Around the web