MGR: கடனில் சிக்கிய பி.வாசு குடும்பம்!.. கேட்கமாலேயே உதவி செய்த பொன்மனச் செம்மல்!..
நடிகர் எம்.ஜி.ஆருக்கு ஏன் வள்ளல் என பெயர் வந்தது என்றால் அவர் எந்த பிரதிபலனையும் பாராமல் பலருக்கும் உதவி செய்திருக்கிறார். அதோடு மக்கள் மூலம் சம்பாதித்த பணத்தில் பெருமளவு அவர் மக்களுக்கே திருப்பி கொடுத்து விட்டார் என்பதுதான் உண்மை. உதவி என தன்னை தேடி வந்தவர்கள் யாரையும் எம்.ஜி.ஆர் கைவிட்டதில்லை. திரையுலகில் அவரால் பயனடைந்தவர்கள் பலர். திரையுலகில் எந்த பிரச்சனை என்றாலும் அவரை சந்தித்தால் அதற்கு தீர்வு கிடைக்கும்.
இந்நிலையில், இயக்குனர் பி.வாசு தனது குடும்பத்திற்கு எம்.ஜி.ஆர் செய்த உதவி பற்றி ஒரு சினிமா விழாவில் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் நாயர் எம்.ஜி.ஆரிடம் பல வருடங்களாக மேக்கப்மேனாக பணிபுரிந்தவர்..
அந்த விழாவில் பேசிய பி.வாசு ‘எனது தந்தை ஒரு தெலுங்கு படத்தை தயாரித்து நஷ்டமானார்.. எனவே வீட்டை அடமானம் வைத்து விட்டார்.. மாதா மாதம் வட்டி கட்டி வந்தார். இந்த தகவல் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிந்து விட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் போடும் போது அப்பாவின் கையை முதன் முறையாக பிடித்து ‘என்னிடம் ஏன் சொல்லல?’ என்று கேட்டார்.

என் அப்பாவோ ‘என்னண்ணே நான் சொல்லல?’ என்று கேட்க ‘படம் தயாரிச்சி நஷ்டமாயிட்டீங்களா?.. வீட்டை அடமானம் வச்சிட்டீங்களா?. யாரோ சொல்லிதான் எனக்கு அது தெரியணுமா?.. என்னை வச்சி ஒரு படம் எடுங்க’ என்று சொல்லிவிட்டு அருகில் இருந்தவர்களிடம் ‘நான் பீதாம்பரத்துக்கு ஒரு படம் பண்றேன். வேலைகளை பாருங்க’ என சொல்லிவிட்டார். என் அப்பாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.
‘கொடுத்து சிவந்த கரங்கள்’ என்கிற தலைப்பில் படம் அறிவிக்கப்பட்டது. தலைப்பு மட்டும்தான் அறிவிக்கப்பட்டது. அன்று மாலையை மூன்றரை லட்சம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டனர். நான் சொல்வது 1974.. என் அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை.. நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று ‘மூன்றரை லட்சம் வந்துவிட்டது.. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என சொல்ல எம்.ஜி.ஆரோ ‘முதலில் வீட்டை எடுங்க.. அப்புறம் படத்தை எடுங்க’ என்று சொன்னார்..
இது எப்படியோ என்.டி.ராமராவுக்கு தெரிந்து விட்டது. ஒரு தெலுங்கு படத்திற்காக அவருக்கு மேக்கப் போட என் அப்பா சென்ற போது ‘என்னிடம் ஏன் சொல்லவில்லை?.. எம்.ஜி.ஆருக்கு முன் எனக்குதானே நீங்கள் மேக்கப் போட்டீங்க.. அவருக்கு முன்னாடி நான்தான் உங்களுக்கு உதவணும். என்னை வச்சி ஒரு படம் எடுங்க’ என சொல்லிவிட்டார். என் அப்பாவுக்கு எதுவும் புரியவில்லை.. தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த நாளை நமதே படத்தை தெலுங்கில் என்.டி.ராமாராவை வைத்து எடுத்தார்.. வீட்டையும் மீட்டார். இப்படி எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்தவர்தான் எம்.ஜி.ஆர்’ என கூறியிருக்கிறார்.
