முதல் படத்தில் பயந்து பயந்து நடித்த ரஜினி!.. சூப்பர்ஸ்டாரின் அபூர்வ ராகங்கள் அனுபவம்...
நடத்துனர் வேலை: பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்த சிவாஜி ராவ் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் படித்தார். அங்கு இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைக்க அவர் இயக்கிய அபூர்வ ராகம் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது.
கதைப்படி கதாநாயகி ஸ்ரீவித்யாவை விட்டு பிரிந்து செல்லும் அவரின் கணவரான ரஜினி புற்று நோயுடன் திரும்பி வந்து அவரிடம் மன்னிப்பு கேட்பது போல் காட்சி.. ரஜினிக்கு முதல் நாள் படப்பிடிப்பு.. அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவே இல்லை.. விடுதியில் தன்னுடன் தங்கியிருந்தவர்களிடம் காலை 5 மணிக்கு என்னை அழைத்து செல்ல கார் வரும். 4 மணிக்கு என்னை எழுப்பி விடுங்கள் என சொல்லியிருக்கிறார்.
தூங்காத இரவு: ஆனால் அவருக்கு தூக்கமே வரவில்லை.. தான் பேச வேண்டிய ‘நான் பைரவியோட புருஷன்’ என்கிற வசனத்தை பலமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டே இருந்தார்.. எப்போது தூங்கினார் என்று தெரியவில்லை.. 4.30 மணிக்கு நண்பர்கள் எழுப்பி விட குளித்து ரெடியாகி மொட்டை மாடியில் போய் நின்று கார் வருகிறதா என்று பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனால் வரவில்லை. சுமார் 6 மணியளவில் கார் வந்தது. வேகமாக கீழே இறங்கி காரில் ஏறி ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கு போனார்..

முதல் கேமரா அனுபவம்: ரஜினிக்கு முதல் ஷாட். ‘நான் பைரவியோட புருஷன்’ என வசனம் பேச வேண்டும். அதுவும் எதிரே இருப்பவர் ஸ்டார் நடிகராக இருந்த கமல்.. ரஜினிக்கு வார்த்தையே வரவில்லை. அப்போது அவருக்கு தமிழும் சரியாக பேசவராது. அருகில் இருந்த நாகேஷ் அவரை பேசவிடாமல் கிண்டலடித்துக் கொண்டே இருந்தார். நாகேஷை சும்மா இருக்கும்படி அடக்கி வைத்துவிட்டு ரஜினியை நடிக்க வைக்க முயற்சி செய்தார் பாலச்சந்தர். சுற்றியிருந்த கூட்டம், எதிரே நின்ற பாலச்சந்தர் என எல்லாவற்றையும் பார்த்து ரஜினிக்கு பதட்டம்.. பயம்.. ஒரு வழியாக பேசி நடித்து முடித்தார்..
ரஜினிக்கு வந்த பயம்:டப்பிங்கில் தனக்கு வேறு ஒரு நடிகர் குரல் கொடுப்பார் என ரஜினி நினைத்தார்.. ஆனால் பாலச்சந்தரோ ரஜினியையே பேச சொல்லி விட்டார். டப்பிங் அறையில் திரையில் முதன்முதலாக தனது முகத்தை பார்க்கிறார் ரஜினி. அதற்குத்தானே ஆசைப்பட்டார்.. ஆனால் அங்கே பாலச்சந்தர் இருந்ததால் அவருக்கு பேசவரவில்லை. எனவே அவரின் உதவியாளர்களிடம் ‘ அவர் இருந்தால் எனக்கு பேச வரவில்லை’ என்று சொல்ல பாலச்சந்தர் வெளியே போய்விட்டார்.

மூன்று முடிச்சு வாய்ப்பு: அதன்பின் தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்தார் ரஜினி. அந்த படத்திற்கு பின் தான் இயக்கிய மூன்று முடிச்சு படத்திலும் ரஜினியை பாலச்சந்தர் நடிக்க வைத்தார். ஏனெனில், தொடர்ந்து 3 படங்களில் உன்னை நடிக்க வைக்கிறேன் என ரஜினிக்கு பாலச்சந்தர் வாக்கு கொடுத்திருந்தார். ரஜினி என்கிற நடிகனை பாலச்சந்தர் இப்படித்தான் உருவாக்கினார்.
அபூர்வ ராகம் படப்பிடிப்பு தளத்தில் ‘பாலச்சந்தர் என்ன சொல்கிறனோ, எப்படி நடித்து காட்டுகிறானோ.. அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடித்து விடு.. நானும் அதைத்தான் செய்கிறேன்’ என ரஜினியிடம் நாகேஷ் கூறினார். ரஜினியோ பாலச்சந்தர் சொன்னதை மட்டுமல்லாமல் தனது ஸ்டைலையும் அதில் கலந்து பேசி, நடித்து பெரிய நடிகராகவும், சூப்பர்ஸ்டாராகவும் வளர்ந்ததுதான் வரலாறு.
