100 படங்களுக்கு மேல் நடித்தும் சொந்த வீடு இல்லை!.. ரமேஷ் கண்ணா சொன்ன விஷயம்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் ரமேஷ் கண்ணா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்குச் சொந்த வீடு கூட இல்லை என்று கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
இயக்குநர் பாண்டியராஜனின் ஆண் பாவம் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்த ரமேஷ் கண்ணா, பின்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமானார். குறிப்பாக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் , நீ வருவாய் என , வானத்தைப் போல , வில்லன் , வரலாறு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணிஅ இயக்குனராகவும் பணியாற்றினார். அஜித்துடன் இணைந்து இவர் நடித்த பல திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை குறித்து ரமேஷ் கண்ணா வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்த பேட்டியில் , இத்தனை ஆண்டுகளாகத் திரையுலகில் பணியாற்றிய எனக்குச் சொந்த வீடு கூட கிடையாது. ஆனால், அதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கடவுள் எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதுதான் கிடைக்கும் என்று எதார்த்தமாகத் தெரிவித்துள்ளார்.
ரமேஷ் கண்ணா நடிகர் மட்டுமின்றி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான். இந்தப் படத்தில் தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும், விஜயகாந்திற்காக ரமேஷ் கண்ணா எழுதிய கதைதான் பின்னாளில் சூர்யா நடிப்பில் ஆதவன் என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
