அந்த சீன்ல நடிக்குறதுகுள்ள நான் பட்ட பாடு இருக்கே…கவுண்டமணி குறித்து விஜயசாந்தி பகிர்ந்த தகவல்
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் விஜயசாந்தி. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் தெலுங்கில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். இவர் நடித்த பூ ஒன்று புயலானது, வைஜெயந்தி ஐபிஎஸ் உள்ளிட்ட பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு 100 நாட்கள் கடந்து ஓடிய பெருமை உண்டு.
தெலுங்கு சினிமாவில் அதிகம் நடித்திருந்தாலும் நேரடி தமிழ் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார் விஜயசாந்தி. அதில் ஒன்றுதான் ரஜினியுடன் நடித்த மன்னன். சிவாஜி புரொடெக்சன் தயாரிப்பில் பி. வாசு இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினி, விஜய்சாந்திக்கு இணையாக கவுண்டமணி கேரக்டரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். படம் முழுவதும் அதகளம் செய்திருப்பார் கவுண்டமணி.
இந்த நிலையில் மன்னன் படத்தில் கவுண்டமணியுடன் நடித்தது குறித்து விஜயசாந்தி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அவர் கூறியபோது, கவுண்டமணி சார் கூட நடிக்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்கும். சிரிப்பு வந்துவிடும் நமக்கு. குறிப்பாக மன்னன் படத்தில் அந்த தியேட்டர் காட்சியில் செயினும் , மோதிரமும் வாங்க ஸ்டேஜில் ரஜினியுடன் கவுண்டமணி வந்து டயலாக் பேசுவார் பாருங்கள் எனக்கு ஸ்பாட்டில் சிரிப்பை அடக்க முடியவில்லை. எப்படியோ கன்ட்ரோல் செய்து அந்த காட்சியில் நடித்தேன். அப்படி சிரிக்க வைத்துவிடுவார் கவுண்டமணி என்று கூறியிருந்தார்.
