அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் போட்ட அந்த எஃபெக்ட்... அடேங்கப்பா அதான் சூப்பர்ஹிட்டா?
எம்ஜிஆர் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நினைத்ததை முடிப்பவன். இந்தப் படத்தின் பெயர் இருக்கே அது எம்ஜிஆர் படத்துக்கு மட்டுமல்ல. எம்ஜிஆருக்கே பொருந்தும். அதுக்குப் பொருத்தமான ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
அடிமைப்பெண் படத்தின் தயாரிப்பாளர் எம்ஜிஆர். அது அப்படிப்பட்ட வெற்றிப்படமாக அமைந்தது என்றால் அதுக்கு முக்கியமான காரணம் அந்த படத்தினுடைய உருவாக்கத்தின் போது எம்ஜிஆர் எடுத்துக்கொண்ட முயற்சி. அந்த படத்தினுடைய ஒரு காட்சியை ராஜஸ்தான் பாலைவனத்தில் படமாக்க வேண்டும் என்று எம்ஜிஆர் முடிவெடுத்தார். அந்த காட்சியை அங்கு படமாக்கினால் தான் வித்தியாசமாக அமையும் என்பது அவருடைய நம்பிக்கை. அந்த ராஜஸ்தான் பாலைவனத்துல படப்பிடிப்பு நடத்துறதுல பல பிரச்சினைகள் இருந்தன.
எந்த இடத்துல படப்பிடிப்பு நடத்தலாம் என்று அவர்கள் தீர்மானித்து இருந்தார்களோ அந்த இடத்தைச் சுற்றி 200 கிலோமீட்டருக்கு எங்கேயும் தண்ணீர் கிடையாது. உணவு விடுதிகள் கிடையாது. இப்படி பல பிரச்சனைகள் அங்கு இருக்கிறதனால படப்பிடிப்பை அங்கு நடத்த வேண்டாம். வேறு எங்காவது நடத்திக் கொள்ளலாம் என இயக்குனர் சங்கர் உள்பட பல பேர் எம்ஜிஆர்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை? உணவும், தண்ணீரும் தானே. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்னு சொன்ன எம்ஜிஆர் 2 லாரிகளில் உணவு ஒரு பக்கம், இன்னொரு பக்கம் இளநீர், குளிர்பானங்கள் என்று அங்கே கொண்டு வந்து இறக்கினார்.
இப்ப பிரச்சனை தீர்ந்ததா என அவர்களிடம் கேட்டபோது இன்னொரு பிரச்சனையை அவர் முன்னாலே வைத்தார் சங்கர். இந்த ராஜஸ்தான் பாலைவனத்தைப் பொறுத்தவரைக்கும் உள்ள இருந்து குட்டி குட்டி பாம்புகள் எல்லாம் வருமாம். அவை மிகுந்த விஷத்தன்மை வாய்ந்தவை. அந்த பாம்பெல்லாம் யூனிட்ல உள்ளவங்களைக் கடிச்சா என்ன ஆகும் என்பது அவருடைய கேள்வியாக இருந்தது. அதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்தார் எம்ஜிஆர்.
எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த அவர் திட்டமிட்டு இருந்தாரோ, அந்த இடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு தரை விரிப்புகளைப் போட ஏற்பாடு செய்தார். அடிமைப்பெண் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்றால் அதுக்கு மிக முக்கியமான காரணம் எம்ஜிஆர் உடைய இந்த திட்டமிடல் தான் என்கிறார் அடிமைப்பெண் படத்தில் பணியாற்றிய ஒரு கலைஞர். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
