கோபத்தில் இருந்தேன்.. ஜென்டில்மேன் பண்ண முடியாதுன்னு சொன்னேன்!.. அர்ஜூன் சொன்ன பிளாஷ்பேக்!..
கர்நாடகாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர்களில் அர்ஜுனன் ஒருவர். இவரை நிஜப் பெயர் ஸ்ரீநிவாஸ். தமிழில் அறிமுகமான முதல் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன். ‘இந்த பேர் உனக்கு பொருத்தமா இருக்கு.. இதையே நீ பேரா வச்சிக்கோ’ என அப்படத்தின் இயக்குனர் சொன்னதால் அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது. இதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அர்ஜுன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அவரது கெரியரில் முக்கியமான படங்களாக அமைந்தது ஒன்று ஜென்டில்மேன், மற்றொன்று முதல்வன். இந்த இரண்டுமே ஷங்கர் இயக்கியவை..ஜென்டில்மேன் கதையை எழுதி ரஜினி, கமல் உள்பட பலரிடமும் கதை சொல்லி யாரும் நடிக்காமல் இறுதியாக அர்ஜுனை வைத்து அந்த படத்தை இயக்க ஷங்கர் முடிவெடுத்தார். இந்த படத்தில் நடித்தது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய அர்ஜுன் ‘தொடர் தோல்வி காரணமாக என்னை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை. எனவே நானே கதை எழுதி, நானே நடித்து, நானே தயாரித்து நானே இயக்க முடிவெடுத்தேன். பிரதாப், சேவகன் போன்ற படங்கள் அப்படி வெளியானது.

அப்படி நான் இயக்கிய முதல் படமான சேவகன் சூப்பர் ஹிட். எனவே இனிமேல் மற்ற தயாரிப்பாளர் படங்களில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்திருந்தேன். நான் கஷ்டப்படும்போது எனக்கு யாரும் உதவவில்லை. யாரும் நமக்கு வேண்டாம் என்கிற வைராக்கியத்தில் இருந்தபோதுதான் எனக்கு ஜென்டில்மேன் வாய்ப்பு வந்தது.
அந்த படத்தில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்தேன். ஆனால், ஷங்கர் நான் செல்லும் பல இடங்களுக்கும் வந்து என்னிடம் அது பற்றி பேசினார். ஒரு டெக்னீசியனை அப்படி நடத்தக்கூடாது என்பதால் அவரை அழைத்து கதை கேட்போம்.. கதை கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடலாம் என முடிவெடுத்து அவரிடம் கதை கேட்டேன். கதையை கேட்டு முடித்த பின் இவ்வளவு நல்ல கதையை எப்படி ரிஜெக்ட் செய்வது என்று யோசித்த நான் ’நான் நடிக்கிறேன்’ என சொல்லிவிட்டேன்’ என கூறியிருக்கிறார்.
