படப்பிடிப்பில் பானுமதியைப் பார்த்த சிவாஜி... அவரது அந்த ஆசை நிறைவேறியதா?
ஸ்டூடியோ அதிபர்கள்ல மிகவும் கண்டிப்பானவர்னு மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டிஆர்.சுந்தரத்தைச் சொல்லலாம். அவர் முன்னால உட்காரக்கூடிய அனுமதியே பார்த்தீங்கன்னா தமிழ்சினிமா உலகில் ஒரு சிலருக்குத் தான் உண்டு. மத்தவங்கள்லாம் அவர் முன்னாடி நின்னுக்கிட்டுத்தான் பேசணும். அப்படி ஒரு நடைமுறையை அவருடைய ஸ்டூடியோவில் வைத்திருந்தவர்தான். அப்படிப்பட்ட டிஆர்.சுந்தரமே பானுமதியை அழைக்கும்போது என்னங்க, வாங்க, போங்கன்னு தான் மரியாதையாக அழைப்பார். இந்த ஸ்டூடியோவில பானுமதி நடித்த திரைப்படம்தான் அலிபாபாவும் 40 திருடர்களும். எம்ஜிஆர் ஜோடியாக பானுமதி நடித்த அந்த திரைப்படம்தான் தமிழ்சினிமா உலகின் முதல் கலர் படம்.
அந்த திரைப்படத்தில் நடித்ததைப் பற்றி மாடர்ன் தியேட்டர்ஸில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை ஒரு பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் பானுமதி. அப்பல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸில் நடிகர்களை எல்லாம் மாட்டுக்கொட்டகை மாதிரி இடத்துலதான் தங்க வைப்பாங்க. பெரிய ஆளுங்கன்னா ஏதாவது ஒரு ஹோட்டல்ல தங்க வைப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.
நான் அந்த படத்துல நடிக்கப் போன போது மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டிஆர்.சுந்தரத்துக்கிட்ட உங்களுக்கு நடிகர், நடிகை மேல மரியாதை இருந்தா அவங்க தங்கறதுக்கு நல்ல இடத்தைக் கொடுங்க. என்னைப் பொருத்தவரைக்கும் மாமியார் வருவாங்க. அவங்க மதிய ஆச்சாரம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி. அதனால என்னால ஓட்டல்ல தங்க முடியாது. இங்க ஆபீஸ்லயே இருக்கேன் என்று அவரிடம் சொன்னேன். உடனே அவருடைய ஆபீஸ்ல இருந்த சேர் டேபிள் எல்லாம் நகர்த்தி விட்டு எங்களுக்குத் தங்க இடம் ஏற்பாடு செய்து கொடுத்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம். அந்த ரூம்லயே குமிட்டி வச்சி என்னுடைய மாமியார் சமைப்பாங்க.
அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் என்னால மறக்க முடியாத இன்னொரு விஷயம்னா அது சிவாஜி இந்தப் படத்து சூட்டிங்கிற்கு வந்தது. சூட்டிங்ல நான் நடிச்சதைப் பார்த்துவிட்டு இந்த அம்மாவோடு ஒரு படத்துல நடிக்கணும்னு அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான சுப்பாராவிடம் சொன்னார் சிவாஜி. அவரது ஆசை அடுத்த சில மாதங்களிலேயே நிறைவேறியது. அவருடன் கள்வனின் காதலி என்ற படத்தில் நான் சேர்ந்து நடித்தேன் என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் பானுமதி.
