உதவி இயக்குனர்களைக் கவர்ந்த பாரதிராஜா... பின்னணியில் இவ்ளோ விஷயம் இருக்கா?
கலைஞர் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் உடன் பிறப்பே என்று சொல்லித் தான் தன்னோட பேச்சைத் தொடங்குவார். உடன்பிறப்பே என அவர் சொல்லி முடித்த உடன் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கும். கலைஞருக்கு உடன்பிறப்பேன்னா புரட்சித்தலைவருக்கு ரத்தத்தின் ரத்தமே... புரட்சித்தலைவர் ரத்தத்தின் ரத்தமேன்னு சொல்லி முடிச்ச உடனே கூட்டத்தில் இருந்து அப்படி ஒரு கைதட்டல் பறக்கும். விசில் சத்தம் வரும்.
அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு என் இனிய தமிழ் மக்களே... பாரதிராஜா என் இனிய தமிழ்மக்களே என்று தன் கரகரத்த குரலில் சொல்லி முடித்ததும், அந்தக் கூட்டம் மும்பையில் இருந்தாலும் சரி. திருவனந்தபுரத்தில் இருந்தாலும் சரி. ஹைதராபாத்தாக இருந்தாலும் சரி. சென்னையாக இருந்தாலும் சரி. அங்கே இருக்குற கூட்டத்தினர் அப்படி கைதட்டி அவரது பேச்சை வரவேற்பார்கள்.
அப்படிப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் இன்று நம்மிடையே இல்லை. பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழக முதல்வர் விஜய், தமிழக முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல் உள்பட பல கலைஞர்கள் வந்து இருந்தனர். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் உதவி இயக்குனர்கள். அவர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தாங்கன்னா அதுக்கு பல காரணங்கள் இருக்கு.
தமிழ்சினிமா உலகில் எந்த உயரத்தில் பாரதிராஜா இருந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அந்த உயரத்தில் இருக்குற எவரும், அவர் மாதிரி மற்றவர்களோடு பேச மாட்டார்கள். எல்லா உதவி இயக்குனர்களையும் பக்கத்தில் அழைத்துக் கொண்டு அவங்ககிட்ட ஒரு மணி நேரம், 2 மணி நேரம் இல்ல. நாள் முழுக்க பேசக்கூடியவர் பாரதிராஜா. தன்னுடைய திரைப்படங்கள் பற்றியும், திரை வாழ்க்கை பற்றியும் அவர் சொல்ல சொல்ல நாள் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர் சொன்ன விஷயங்கள் தான் இன்றைக்கு இருக்குற இயக்குனர்களுக்குப் பாடங்கள்.
அதன் காரணமாகத்தான் பாரதிராஜாகிட்ட அவர்களுக்கு நேசம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. அவங்கக்கிட்ட உதவி இயக்குனர்கள் அவரை இயக்குனர்னு சொல்வாங்க. ஆனா தமிழ்சினிமாவில் உள்ள இயக்குனர்கள் எல்லோரும் இயக்குனர் என்று அழைத்த ஒரே மாமனிதர் பாரதிராஜா தான். அவர் செய்த சாதனைகள் அளவிட முடியாதவை. அவர் செய்த சாதனைகளை எல்லாம் இனி ஒருவர் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அப்படிப்பட்ட சாதனைகளுக்குரிய அவரது மறைவு தமிழ்சினிமா உலகுக்கு மட்டுமல்ல. இந்திய சினிமா உலகுக்கே பேரிழப்பு என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
