ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்த பாரதிராஜா... தைரியம் வந்தது எப்படி?
தமிழ்சினிமாவின் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்டவர் பாரதிராஜா. என் இனிய தமிழ் மக்களே என்று தனது கரகரத்த குரலில் கூப்பிய இரு கைகளுடன் திரைக்கு வரும்போதேல்லாம் விசில் சத்தம் காதைப் பிளக்கும். இவர் கிராமிய மணம் கமழ படம் எடுப்பதில் வல்லவர். இவருக்கு நிகர் இவரே. அந்த வகையில், தமிழ்ப்பட உலகின் இயக்குனர்களில் பல ஆண்டுகளாக முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார் என்றால் அதில் எள்ளளவும் ஐயமில்லை.
தன் முதல் படமான 16 வயதினிலேவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் பாரதிராஜா. இந்தப் படத்தில் தான் கமல், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணியின் நடிப்பை வெகுவாக ரசிகர்கள் ரசித்தனர். அதுவரை ஹீரோவாக இருந்த கமலை கோவணம் கட்டச் செய்திருப்பார் பாரதிராஜா. இப்படி பல புதுமைகளைத் தன் முதல் படத்திலேயே புகுத்தி இருந்தார் இயக்குனர் இமயம். அந்தப் படத்தில் தான் அதுவரை ஸ்டூடியோவுக்குள்ளேயே இருந்த தமிழ்சினிமாவை வெளி உலகிற்கு அழைத்து வந்தார் பாரதிராஜா. அது எப்படி நடந்ததுன்னு பார்க்கலாமா...
பாரதிராஜாவுக்கு ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்து சூட் பண்ற தைரியம் எப்படி வந்தது? என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். பாரதிராஜாவுக்கு ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்ததுக்கு தைரியம் எல்லாம் காரணமல்ல. அவர் எழுதி இருந்த கதை அப்படிப்பட்டது. 16 வயதினிலே கதையை ஏவிஎம் ஸ்டூடியோவிலோ, வாஹினி ஸ்டூடியோவிலோ படமாக்க முடியுமா? அதன் காரணமாகத்தான் கேமராவை எடுத்துக் கொண்டு மைசூருக்குச் சென்றார் அவர் என்கிறார் சித்ரா லட்சுமணன்.
