படப்பிரச்சனையில் அவமதித்த சந்திரபாபு..! எம்ஜிஆர் கொடுத்த சூப்பர் ட்ரீட்மெண்ட்!
சந்திரபாபுவுக்கும், எம்ஜிஆருக்கும் இருந்த கருத்து மோதலுக்கு முடிவு கட்டியது யாரு? வாங்க பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
சந்திரபாபுவுக்கு அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாத சமயத்துல டிஆர்.ராமண்ணாக்கிட்ட இருந்து அவருக்கு ஒரு போன் வந்தது. நான் டிஆர்.ராமண்ணா பேசுறேன். அடுத்து ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். நீங்க எந்த நேரம் சரியா இருக்கும்னு சொன்னீங்கன்னா நான் வீட்டுக்கு வந்து கதை சொல்றேன் என்றார் டிஆர்.ராமண்ணா. உங்ககிட்ட போய் நான் கதை கேட்பேனா? உங்க கம்பெனியைப் பொருத்தவரைக்கும் கதையும் கேட்க மாட்டேன். படத்துல நடிக்கிறதுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்கன்னும் நான் கேட்க மாட்டேன். நிச்சயமா நான் நடிக்கிறேன் என்றார் சந்திரபாபு.
அது சரி யார் ஹீரோன்னு கேட்க, எம்ஜிஆர் தான் ஹீரோவா நடிக்கிறாருன்னு சொன்னார் டிஆர்.ராமண்ணா. அந்த ஆளுக்கிட்டன்னு சந்திரபாபு ஆரம்பிக்க, அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் விடுங்கன்னு சொன்னார் டிஆர்.ராமண்ணா. சரி. இந்தப் படத்துல நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்கன்னு கேட்டார் சந்திரபாபு. எதிர்பார்க்காத ஒரு தொகையை சொன்னார் டிஆர்.ராமண்ணா. சந்திரபாபு ஒரு 50 ஆயிரம் ரூபாய் கேட்கலாம்ன இருந்தாரு. ஆனா ஒரு லட்ச ரூபாய் சொன்னார் டிஆர்.ராமண்ணா. அதுக்குப் பின்னால சந்திரபாபு நடிக்க என்ன தயக்கம்? படத்தை ஒப்புக்கொண்டார். அதன் பெயர் பறக்கும் பாவை.
படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது எம்ஜிஆரின் உதவியாளர் சந்திரபாபு பக்கத்துல வந்து ஐயா உங்களைப் பார்க்கணும்னு சொல்றாரு என்றார். ஐயா என்னைப் பார்க்கணும்னா ஐயா தான் இங்கே வரணுமே தவிர நான் போய் அவரைப் பார்க்க முடியாது என்று சந்திரபாபுவிடம் இருந்து பதில் வந்தது. அவர் இப்படி பதில் சொன்ன உடனே, அந்த நபருக்கு என்ன பண்றதுன்னே புரியல. இதைப் போய் எப்படி எம்ஜிஆர்க்கிட்ட சொல்றது? மெல்ல தயங்கி தயங்கி அந்த நபர் எம்ஜிஆரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அடுத்த 10வது நிமிஷம் எம்ஜிஆர் புறப்பட்டு வந்தார். எம்ஜிஆர் வந்த உடனே தான் உட்கார்ந்து இருந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கக்கூட இல்லை சந்திரபாபு. நீங்க என் மேல ரொம்ப கோபமா இருக்கீங்கன்னு தெரியுது. உங்ககிட்ட சில விஷயங்கள் கேட்குறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
உங்க படத்துல நடிக்க வாய்ப்பு கொடுங்கன்னு எந்தக் காலகட்டத்துலயாவது நான் கேட்டுருக்கேனா? உங்க கஷ்டத்துக்கு எல்லாம் காரணமான தயாரிக்கும் பொறுப்பு நீங்களே எடுத்த முடிவு. அது நான் சொல்லி செஞ்சதா? இல்ல நீங்களா எடுத்த முடிவா? கடுமையான வட்டிக்கு உங்க சொத்தெல்லாம் அடமானம் வச்சி கடன் வாங்க சொன்னது நானா? படம் எடுக்கணும்னு என்னை சந்திச்சி நீங்க பேசிய போது, என்னை வச்சிப் படம் எடுக்கணும்னா கொஞ்சம் பொறுமையா இருக்கணும். நிச்சயமா காலதாமதம் ஆகும்னு நான் உங்ககிட்ட சத்தியம் வாங்கிட்டேனா, இல்லையா? என்னுடைய எத்தனை படங்களின் படப்பிடிப்பு நின்னு போயிருக்கு? ஏன் என்னுடையதே கூட ஒரு சில படங்கள் நின்னுபோயிருக்கு. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?
உங்களுக்கும் எனக்கும் நடுவுல எத்தனை பேரு இருக்காங்க? அவங்கள்ல யாராவது நம்மை ரெண்டு பேருக்கும் உள்ள இந்தக் கருத்து வேறுபாடை நீக்குறதுக்கு ஏதாவது முயற்சி பண்ணினாங்களா? நீங்க ஆத்திரத்துல என்னைப் பத்தி தப்பு தப்பா பத்திரிகைக்காரங்ககிட்ட பேசுன மாதிரி என்னைக்காவது நான் உங்களைப் பத்திப் பேசிருக்கேனா? இது எல்லாத்துக்கும் மேல நான் என்ன தான் உங்களை ஆத்திரப்படுத்தி இருந்தாலும் நான் தகப்பனா மதிக்கிற எங்க அண்ணனை நாற்காலியா தூக்கி நீங்க அடிக்கப் போனீங்களே? அது சரிதானா? உங்க அப்பாவை நான் இப்படி அடிக்கப் போயிருந்தா நீங்க மன்னிப்பீங்களா? நாடோடி மன்னன் வெற்றி விழாவுல நான் என்ன பேசுனேன்? சந்திரபாபு ஒரு மாபெரும் கலைஞன்னு பேசுனேன். அதே எண்ணத்துலதான் இன்னிக்கும் இருக்கேன்.
அதனாலதான் நாம ரெண்டு பேரும் இந்தப் படத்துல சேர்ந்து நடிக்கிறோம். கிறிஸ்துமஸ் அன்னைக்கு உங்களுக்கு ஒரு கேக்கும், பணமும் வந்ததே. அது யாரு அனுப்பிச்சிருப்பாங்கன்னு பல மணி நேரம் நீங்க குழம்பி இருப்பீங்க. அந்த ரெண்டையும் கொடுத்து அனுப்பிச்சது நான் தான். இந்த பறக்கும் பாவை படத்துல நீங்க நடிக்கிறீங்கன்னா அதுக்கு காரணமும் நான் தான். இந்தப் படத்துல உங்களை ஒப்பந்தம் பண்ணச் சொல்லி நான் தான் டிஆர்.ராமண்ணாகிட்ட சொன்னேன். அவங்க உங்களுக்குச் சொன்ன லட்ச ரூபாய் சம்பளத் தொகையும்... நான் சொல்லி அவர் சொன்னது தான்.
உங்க வேதத்துல ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தையும் காட்டுன்னு ஒரு வரி வரும். நான் மறுகன்னத்தைக் காட்டல. அதுக்குப் பதிலா கிறிஸ்துமஸ் கேக்கை உங்களுக்கு அனுப்பி வெச்சேன். பாபு சார் நீங்க நல்ல மனுஷன். நல்ல கலைஞன். இன்னும் மாபெரும் கலைஞனா வரணும். இன்னும் பெரிய மனுஷனா வளரணும்னு நான் ஆசைப்படுறேன்னு எம்ஜிஆர் சொன்ன போது சந்திரபாபு கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னால, சந்திரபாபு கண்கள்ல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்ததுன்னா அது அன்னைக்குத்தான் என்கிறார் சித்ரா லட்சுமணன்.
