ஹீரோவாவே நடிச்சிட்டிருந்த ராஜ்கிரண் சாருக்கு 'பாண்டவர் பூமி'-ல கேரக்டர் ரோல் பண்ண மனசு இடம் கொடுக்கல... சேரன் ஷேரிங்ஸ்!
நடிகர் ராஜ்கிரண் ஆரம்பத்தில் 'என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான்' என ஹீரோவாக நடித்து வந்தார். அவரை குணச்சித்திர நடிகராக மாற்றிய படம் 'பாண்டவர் பூமி' தான்.
இயக்குநரும், நடிகருமான சேரன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக அருண் விஜய், ஷமிதா நடித்திருந்தனர். சமீபத்தில், இயக்குநர் சேரன் கொடுத்த பேட்டியில் ராஜ்கிரண் குறித்து பேசுகையில் "எனக்கு 'பாண்டவர் பூமி' கதைக்கு ஒரு மூத்த அண்ணன் கேரக்டரில் நடிக்க ஒருத்தர் தேவைப்பட்டார்.

அப்போ ராஜ்கிரண் சார் ஒரு பெரிய தேக்கத்துல இருந்தார். தொடர்ச்சியா அவர் நான்கைந்து படங்கள் பண்ணி சரியா போகல. ஒரு டைம்ல வந்து ரஜினி சாருக்கு equal-ஆ பேசப்பட்ட ஒரு நடிகர். முதன்முதலா தமிழ் சினிமாவில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண் சார் தான். அப்போ ரஜினி சாரே அவ்ளோ சம்பளம் வாங்கல.
நான் போய் ராஜ்கிரண் சார்கிட்ட 'பாண்டவர் பூமி' கதையை சொல்லப்போகும் போது வீட்ல தனிமையா யாருமே இல்லாம இருந்தார். அப்புறம் நான் கதையை சொன்னேன், ஆனால் அவர் நடிக்க மறுப்பு தெரிவிச்சார். ஏன்னா, ஒரு ஹீரோவாவே சினிமாவில் டிராவல் பண்ண ஒருத்தர், இந்த படத்துல ஒரு கேரக்டர் ரோல்ல நடிக்க அவரோட மனசு இடம் கொடுக்கல. அப்புறம் நான் அவர் மனசு நோகாதபடி ஓரளவுக்கு சம்பளம் பேசி இதுல நடிக்க ஓகே சொல்ல வச்சேன்" என்று கூறியுள்ளார்.
