கேட்க தயங்கிய தேவா... கேட்காமலேயே கொடுத்த தயாரிப்பாளர்!
அண்மையில் மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவைப் பற்றி எந்த மேடையில் பேசினாலும் அவரது பாட்டுத்திறனை விட, பண்பாட்டுத் திறனைத் தான் நான் அதிகம் மேடையில் பேசி இருக்கிறேன். மிகப்பெரிய உயரத்துக்குச் சென்றாலும், அதை தலையில் ஏத்திக்காம மிகவும் எளிமையாக வாழ்ந்த மனிதர் தேவா. அதற்கு உதாரணமாக பல சம்பவங்களைச் சொல்லலாம். எனது இனிய நண்பரான தங்கர்பச்சான், 27 திரைப்படங்களில் தேவாவுடன் இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றவர்.
அகத்தியன் இயக்கத்தில் தேவா இசை அமைத்த காதல் கோட்டை படத்திற்கும் தங்கர்பச்சான் தான் ஒளிப்பதிவாளர். காதல் கோட்டை எந்தளவுக்கு வெற்றியைப் பெற்றது என்பதும், அந்த வெற்றியில் தேவாவுக்கு எந்தளவுக்கு பங்கு உண்டு என்பதும் நாம் அறிந்த விஷயம். அந்தப் படம் அவ்வளவு வெற்றி பெற்றதுக்குப் பின்னால கொஞ்சம் கூடுதலா சம்பளம் கேட்கலாமா என்கின்ற எண்ணம் தேவாவுக்கு எழுந்தது. அதை தங்கர்பச்சானிடம் ஒருநாள் பகிர்ந்தார் தேவா.
இந்தப் படம் இவ்ளோ பிரமாதமா ஓடுது அண்ணே. அடுத்த படத்துக்கு ஒரு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கூட்டிக் கேட்கலாமா என்று தேவா கேட்டார். அதற்கு, தங்கர் பச்சான், என்ன தேவா பேசுறீங்க. படம் எவ்வளவு பெரிய ஹிட். அப்படி இருக்க 50 ஆயிரம் கேட்க ஏன் தயங்குறீங்க? 2 லட்ச ரூபாய் கேளுங்க என்றார். அவர் அப்படி சொன்னதும், காதல் கோட்டை தயாரிப்பாளர்கிட்ட சம்பளத்தைக் கூட்டித் தரும்படி தேவா கேட்டாரா என்றால் இல்லை. தேவாவைப் பொருத்தவரைக்கும் சிவசக்தி பாண்டியன்கிட்ட மட்டும் இல்லை. எந்த தயாரிப்பாளர்கிட்டேயும் எனக்கு இவ்வளவுதான் சம்பளம் வேணும்னு எந்தக் காலத்திலும் நிர்ப்பந்தித்ததே இல்லை.
நிபந்தனை இல்லாமல் வாழ்ந்த ஒரு மாபெரும் கலைஞர் தான் தேவா. அவரோட பெருந்தன்மைன்னா, இந்தப் படத்தோட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனோட பெருந்தன்மையைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். தேவா கேட்காமலேயே தன்னோட அடுத்த படத்துல ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்து இருக்கிறார் அவர். 30 ஆண்டுகளுக்கு முன்னால சினிமா எவ்வளவு ஆரோக்கியமா இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
