சிவாஜி பட பேனரை பார்த்து ஏமாந்து போன தேவா!.. கண்ணீரில் முடிந்த சோக பிளாஷ்பேக்!...
சினிமாவில் நடிகராவது, இயக்குனராவது, இசையமைப்பாளராவது அவ்வளவு சுலபம் இல்லை.. சினிமா பின்னணி இருக்க வேண்டும்.. அல்லது முக்கிய பிரபலத்தின் சிபாரிசு வேண்டும்.. இவையெல்லாம் இல்லாமல் வாய்ப்பு கிடைக்காது. ஆனாலும் சிலர் எந்த பின்புலமும் இல்லாமல் போராடி நடிகராகவும், இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் மாறி வெற்றி பெற்று காட்டியிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் இசையமைப்பாளர் தேவா. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பக்திப்பாடல்கலுக்கு கூட இவர் இசையமைத்திருக்கிறார். ஒருபக்கம் தூர்தர்ஷனில் வேலை பார்த்துக் கொண்டே பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி இசையமைப்பாளர் வாய்ப்பு கேட்டிருக்கிறார்..
அப்போது பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சந்திரபோஸுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். ஆனால் அதில் கூட சந்திரபோஸின் பெயர் மட்டும்தான் வந்ததால் தேவா அதை கைவிட்டார். ஒருமுறை, சென்னை அண்ணா சமாதி அருகே சிவாஜியின் ‘மண்ணுக்குள் வைரம்’ என்கிற பேனரை தேவா பார்த்துள்ளார்.
அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திடம் தேவா 5 வருடங்களாக வாய்ப்பு கேட்டு வந்தார். அந்த போஸ்டரில் ‘தேவேந்திரன்’ என்கிற பெயர் போட்டிருக்க அது தான்தான் என முடிவு செய்து மகிழ்ச்சியில் சைக்கிளிலேயே கோடம்பாக்கத்தில் உள்ள அந்த தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் ‘அது நீங்கள் இல்லை.. திருவெற்றியூர் ரவி என்பவரின் பெயர்’ என அந்த நிறுவனம் சொல்ல கண்கலங்கிய படி நின்றுள்ளார் தேவா. இப்படியெல்லாம் போராடித்தான் நடிகர் பிரசாந்த் சினிமாவில் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் இசையமைத்து அந்த பாடல்கள் மூலம் தேவா பிரபலமானார். அதன்பின் ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகவும் தேவா மாறினார். மாரடைப்பு காரணமாக தனது 74வது வயதில் தேவா காலமானார்.
