சூர்யாவின் 'காக்க காக்க' படத்தை ஹாலிவுட்ல ரீமேக் செய்ய ப்ளான் பண்ணோம்... கெளதம் மேனன் சொன்ன சுவாரஸ்யத் தகவல்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் படங்களுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவரது படங்கள் ரொம்ப ஸ்டைலிஷாக இருக்கும்.
'மின்னலே' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனனுக்கு அமைந்த இரண்டாவது படம் தான் 'காக்க காக்க'. இதில் சூர்யா, ஜோதிகா ஜோடியாக நடிக்க, வில்லனாக ஜீவன் நடித்திருந்தார்.
கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் சூர்யா போலீஸ் ரோலில் அசத்தியிருந்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் தெலுங்கு ரீமேக்கை கௌதமே இயக்க, ஹீரோவாக வெங்கடேஷ் நடித்திருந்தார்.
சமீபத்தில், கெளதம் மேனன் கொடுத்த பேட்டி ஒன்றில் "'காக்க காக்க' படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய நாங்க முயற்சி பண்ணோம். தயாரிப்பாளர் தாணு சாரோட நண்பர் ஒருவர் தான், இதை கண்டிப்பாக அங்கு ரீமேக் பண்ண வேண்டும் என்று சொல்லி என்னையும், அவரையும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கூட்டிட்டு போனார். அங்கு நான்கைந்து தயாரிப்பாளர்களை சந்தித்து பேசினோம். ஒன்றரை மாதங்கள் தொடர்ந்து பேசுனோம். அவங்களுக்கு என்னோட வொர்க் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஆனா, சில காரணங்களால அது நடக்காம போயிருச்சு" என்று கூறியுள்ளார்.
