கோவத்துல 5 நிமிஷத்துல இளையராஜா போட்ட பாட்டு!. விஜயகாந்துக்கு எவர்கிரீன் ஹிட்..
இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமல்ல.. மிகவும் வேகமாக பாடல்களை உருவாக்கும் திறமை கொண்டவர். அதனால்தான் இசையமைக்க துவங்கி நான்கு வருடங்களில் அவர் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்தார். தற்போது அவர் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். 80களில் அவர் இசையமைத்த பல பாடல்கள்தான் இப்போதும் இசை ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது. பலரின் கார் பயணங்களில் அந்த பாடல்கள்தான் தற்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா நடித்து இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படம் சின்னக் கவுண்டர். இந்த திரைப்படம் 1992ம் வருடம் பொங்கலுக்கு வெளியாகி விஜயகாந்துக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. வழக்கமாக அதிரடியான ஆக்சன் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தை இந்த படத்தில் பக்குவமாக, அமைதியாக பேசும் நபராக ஆர்.வி. உதயகுமார் நடிக்க வைத்திருந்தார்..
இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மனதை வருடக்கூடிய பாடல்கள் என்றாலும், எஸ்.பி.பி, எஸ்.ஜானகி இணைந்து பாடிய ‘முத்து மணி மாலை’ பாடல் பலருக்கும் பிடித்த பாடலாகும். இந்நிலையில்தான் இந்த பாடல் உருவான விதம் பற்றி இப்படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

முத்து மணி மாலை பாட்டு சின்ன கவுண்டர் படத்திற்காக கம்போஸ் பண்ணது இல்லை. இளையராஜா சார் வேற ஒரு பாட்டை கம்போஸ் பண்ணி நான் வறதுக்கு முன்னாடியே ரிகர்சலுக்கு அனுப்பிட்டார்.. நான் வந்து அந்த பாட்ட கேட்டுட்டு ‘சார் இந்த பாட்டு எனக்கு பிடிக்கல’ன்னு சொன்னேன்.. கோவத்துல என்ன செமையா திட்டினாரு. நான் வெளியே போயிட்டேன்..
15 நிமிஷம் கழிச்சி என்னை கூப்பிட்டு ‘உனக்கு என்ன மாதிரி பாட்டு வேணும்?’ என கேட்டார். ‘என்னோட சின்ன கவுண்டர் எதார்த்தமான ஆளு.. நீங்க போட்டிருக்க பாட்டு ரொம்ப பில்டப்பா இருக்கு.. அது வேணாம்’னு சொன்னேன்.. செம கோவத்துல ஆர்மோனியத்தை இழுத்து போட்ட டியூன்தான் ‘முத்து மணி மாலை’.. அஞ்சு நிமிஷத்துல அந்த பாட்ட கம்போஸ் பண்ணி முடிச்சிட்டாரு’எனக் கூறியிருக்கிறார்.
