ஜெய்சங்கரை கவர்ந்த அந்த இரு இயக்குனர்கள்... லிஸ்ட்ல அவரும் இருக்காரா?
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரைப் பொருத்தவரையில் காலில் சக்கரத்;தைக் கட்டிக்கிட்டு சுற்றுபவர் என்றுதான் எல்லோரும் அந்தக் காலத்தில் நினைத்தார்கள். அதுமாதிரி தான் ஜெய்சங்கரும் அந்தக் காலகட்டத்தில் இருந்தார். ஒரு ஸ்டூடியோவில் படப்பிடிப்புன்னா அந்த ஸ்டூடியோவிலே இருக்க மாட்டார் ஜெய்சங்கர். கோடம்பாக்கத்தில் என்னென்ன ஸ்டூடியோ இருக்கிறதோ அங்கெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு வருவதுதான் அவரது வழக்கம். அப்படி கற்பகம் ஸ்டூடியோவுக்கு ஒருமுறை போகும்போதுதான் கேஎஸ்.கோபாலகிருஷ்ணனை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அதன் காரணமாகத் தான் உயிரா, மானமா படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை ஜெய்சங்கருக்கு வழங்கினார் கேஎஸ்.கோபாலகிருஷ்ணன். ஜெய்சங்கர் நடித்த படங்களில் முக்கியமான திரைப்படம். அந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் கேஎஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே இறுக்கமான நட்பு உருவாகியது. அதைத் தொடர்ந்து அவரது இயக்கத்திலே வந்தாளே மகராசி, குலமா, குணமா, வாயில்லா பூச்சி, ரவுடி ராக்கம்மா போன்ற பல படங்களில் அவரது இயக்கத்தில் நடித்தார் ஜெய்சங்கர்.
நான் பல இயக்குனர்களின் படங்களில் நடித்து இருந்தாலும் கேஎஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர் ஆகியோரது இயக்கத்தில் வந்த படங்களில் என் நடிப்பு வித்தியாசமாக இருக்கும். அதற்கு காரணம் அந்த இயக்குனர்கள் தான். அந்தப் படங்களில் அவர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதைப் பின்பற்றி அப்படியே நான் நடித்தேன். அவங்க டைரக்ஷன்ல நடிக்கும்போது எனக்குள் ஏற்படுகின்ற உற்சாகமும், மகிழ்ச்சியும் அலாதியானது என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்துள்ளார் ஜெய்சங்கர்.
