வாத்தியாரே!.. கத்திய பாக்யராஜ்!... முறைத்த எம்.ஜி.ஆர்!.. ஒரு பிளாஷ்பேக்..

 
bhagyaraj

மறைந்த இயக்குனர் பாக்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த, நெருக்கமாக பழகிய சில இயக்குனர்களில் பாக்கியராஜ் முக்கியமானவர். பாக்யராஜின் திரைப்படங்களைப் பார்த்து பாராட்டி பேசிய எம்.ஜி.ஆர் ஒரு விழாவில் பாக்கியராஜை தனது கலையுலக வாரிசு எனவும் அறிவித்தார். இது அப்போது சினிமாவில் இருந்த பலருக்கும் பொறாமை கொள்ள செய்தது.

பாக்கியராஜின் தூரல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, அந்த ஏழு நிமிடம் உள்ளிட்ட படங்களை மனதார பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர். சமீபத்தில் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் எம்.ஜி.ஆரை பற்றி பகிர்ந்து கொண்ட பேட்டி தொடர்பான வீடியோ மூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது..

நான் சென்னைக்கு புதிதில் ஆற்காடு முதலியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்க இடம் கிடைத்தது. வீட்டிலேயே மெக்கானிக் ஷாப் மற்றும் கார் பார்க்கிங் ஆகியவை இருக்கும்.  ஆனாலும் அங்கே நான் தங்கினேன்.. எதிரிலேயே எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இருந்தது. எனவே எம்ஜிஆர் அங்கு வரும்போது அவரை பார்க்கலாம் என்கிற ஆசையும் ஒரு காரணம்.

ஆனால் அவரைப் பார்க்க முடியவில்லை.. பெரிய கேட்டாக இருக்கும்.. எப்போதாவது வருவார்.. காரை மட்டுமே பார்க்க முடியும்.. ஒரு நாள் மொட்டை மாடிக்கு சென்று நின்று பார்த்தேன்.. அவர் உள்ளே சென்று இறங்கி நடந்து போனார்.. பின்னால் இருந்து மட்டும் பார்க்க முடிந்தது.. அதன்பின் ஒருநாள் அவர் காரிலிருந்து கீழே இறங்கி நடந்து உள்ளே போனபோது மேலே இருந்து ‘வாத்தியாரே’ என்று கத்தினேன்..

ஒரு நிமிடம் ஷாக் ஆன எம்.ஜி.ஆர் மேலே என்னை பார்த்து முறைத்து ‘என்ன?’ என கேட்டார். ‘ஒன்னுமில்லை.. உங்களை பார்க்கணும்.. அவ்வளவுதான்’ என்று கையெடுத்து கும்பிட்டேன்.. ‘பார்த்து விட்டாயா?’ என்று கேட்டார்.. ‘பார்த்து விட்டேன்.. போதும்’ என்றேன். சிரித்துக் கொண்டே கையசைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்’ என சொல்லியிருக்கிறார்.

Tags

From Around the web