வாலியை நாசூக்காக கிண்டலடித்த கலைஞர்... அதையும் ரசித்த கவிஞர்!
லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் நாடகக்குழுவுக்காக கலைஞர் எழுதிக் கொடுத்தது தான் மணிமண்டபம் நாடகம். பின்னர் அந்தக் கதையைப் படமாக எடுத்த போது அந்தக் கதைக்குப் பாடல் எழுத வாலியை ஒப்பந்தம் செய்தார் எஸ்எஸ்.ராஜேந்திரன். அந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் சுதர்சனம். அருணாச்சலம் சாலையில் எஸ்எஸ்.ஆர்.பங்கஜம் என்ற திரையரங்கில் தான் அந்தக் காலகட்டத்தில் எஸ்எஸ்ஆர். தோட்டம் இருந்தது. அங்குதான் அந்தப் பாடலுக்கான கம்போசிங் நடைபெற்றது.
சுதர்சனம் டியூனை வாசிச்ச உடனே அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தப் பாடலை எழுதி முடித்து விட்டார் கவிஞர் வாலி. அதற்குப் பின்னால் அந்தப் படத்தின் கதாசிரியரான கலைஞரின் வருகைக்காக எல்லோரும் காத்துக் கொண்டு இருந்தார்கள். கலைஞர் வந்தவுடன் அவருக்குப் பாடலாசிரியர் வாலியை அறிமுகம் செய்து வைத்தார்கள். அதுதான் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு.
பாட்டை வாங்கிப் படித்த கலைஞர், பாட்டு ரொம்ப நல்லாருக்கு. ஆனா வல்லினம் வர வேண்டிய இடத்தில் இடையினம் இருக்கு என்றார். அந்தப் பாட்டுல ஒரு இடத்துல பெரிய 'ற' இடம்பெற வேண்டியதற்குப் பதிலாக சின்ன 'ர' இடம்பெற்றிருந்தது. அதை வாங்கிப் பார்த்த வாலி, இது என்னுடைய பிழை அல்ல. நான் சரியா தான் எழுதி இருக்கேன். இந்தப் பாடலைப் பிரதி எடுத்த உதவியாளர் தவறாக எழுதிவிட்டார் என்றார்.
வாலியின் அந்தப் பதிலைக் கேட்டு விட்டு கலைஞர் சொன்ன விமர்சனம் தான் ரொம்ப முக்கியமானது. நீங்க சரியாதான் எழுதி இருக்கீங்க. ஆனாலும் உதவி இயக்குனர் பிரதி எடுத்ததற்குப் பின்னால ஒருமுறை அந்தப் பாட்டை வாங்கி நீங்க சரிபார்க்குறது ரொம்ப முக்கியம். அப்படி இல்லைன்னா வல்லினம் மெல்லினம் தெரியாத புள்ளி(ல்லி)னம்னு உங்களை மத்தவங்க நினைக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லி சிரித்தார் கலைஞர்.
கலைஞரின் இதுபோன்ற சிலேடைகளைத் தொடர்ந்து நான் கேட்கும் பாக்கியம் எனக்கு அமைந்ததுன்னு ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்துள்ளார் கவிஞர் வாலி.
