40 ஆண்டுகளை கடந்த விக்ரம்! இன்றும் குறையாத மிரட்டல்!
திரையுலகில் துரந்தர், மிஸ்டர் எக்ஸ் போன்ற ஸ்பை-த்ரில்லர் படங்கள் தற்போது வெளிவந்து வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பே அப்படியொரு படம் வெளிவந்துள்ளது இபோதைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. கடந்த 1986-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி வெளியானது விக்ரம் . கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் கதையம்சத்திலும் அன்றைய காலகட்டத்தை விட பல ஆண்டுகள் முன்னோக்கிச் சென்ற ஒரு படைப்பாக பார்க்கப்படுகிறது. இப்படம் வெளியானபோது இந்தியத் திரையுலகையே வியப்பாக பார்த்தது.
இப்படத்தை அப்போதைய கமர்ஷியல் வெற்றிப்பட இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருந்தார். பிரபல எழுத்தாளர் சுஜாதா மற்றும் கமல்ஹாசன் இணைந்து திரைக்கதை அமைத்தனர். இசைஞானி இளையராஜா. இப்படத்தில் அவர் பயன்படுத்திய கணினி இசை மற்றும் பின்னணி இசை இன்றும் ஒரு பாடப்புத்தகமாக உள்ளது.
பி.எஸ். நிவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. வெளிநாட்டு லொகேஷன்களையும், ஆக்ஷன் காட்சிகளையும் சர்வதேசத் தரத்தில் படம்பிடித்தார் அவர்.
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முதன்முதலில் கணினி இசை பயன்படுத்தப்பட்டது இப்படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம்.. விக்ரம். என்ற டைட்டில் பாடல் இப்போது கேட்டாலும் புது உணர்வை கொடுக்கும்.

ஒரு கடத்தப்பட்ட ஏவுகணையை மீட்பதுதான் படத்தின் மையக்கதை. ஒரு ஏவுகணையைச் சுற்றி ஒரு முழுப்படத்தின் கதையை அமைத்தது அப்போது ரசிகர்களுக்குப் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. ஒரு உலகளாவிய உளவாளி எப்படி இருப்பார் என்பதை ஏஜென்ட் விக்ரம் கதாபாத்திரத்தின் மூலம் கமல் நிரூபித்தார். சத்யராஜ் , அம்பிகா, லிசி, டிம்பிள் கபாடியா மற்றும் சாருஹாசன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
40 ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்திலும் விக்ரம் (1986) ஒரு முன்னோடித் திரைப்படமாகத் திகழ்கிறது என்பது மிகையாகாது.
