எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றிய கண்ணதாசன்... இது எப்போ நடந்தது?
1960களின் காலகட்டம். எம்ஜிஆர் தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரம். அதே சமயம் அரசியலிலும் பரபரப்பாக இருந்தார். இந்த நேரத்தில் மிகக் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். அதீத உடல் சோர்வும் இருந்தது. மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பின் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆனால் எம்ஜிஆருக்கு ஒரு அறையின் உள்ளே முடங்கிக் கிடப்பது பெரிய சோதனையாக இருந்தது. படுக்கையிலே முடங்கிக்கிடந்த எம்ஜிஆருக்கு இது விரக்தியைத் தந்தது.
இந்த சமயம் தான் எம்எஸ்வி. எம்ஜிஆரை சந்தித்தார். உடனே எம்எஸ்வி. ஒரு அதிரடி முடிவை எடுத்தார். அப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டு இருந்த பணத்தோட்டம் படத்துக்குப் பாடலை எழுத வேண்டி இருந்தது. உடனே எம்ஜிஆரின் நிலையை கண்ணதாசனிடம் எடுத்துக் கூறிய எம்எஸ்வி. அவருக்கு புதிய நம்பிக்கையை ஊட்டும் வரிகளை நீங்கள் தான் எழுத வேண்டும் என சொன்னார். அரசியல் ரீதியாக எவ்வளவு தான் மோதல்கள் இருந்தாலும் நண்பனின் இந்த நிலையைக் கேட்டு கவியரசரின் உள்ளம் பதறியது.
எம்ஜிஆரின் நிலையை மனதில் கொண்டு அவருக்காக அந்தப் பாடலை எழுதினார். ஒரு மனிதன் சோதனைகளைக் கண்டு அஞ்சக்கூடாது என்பதற்கேற்ப கண்ணதாசன் எழுதிய பாடல்தான் இது. ''ஆடும் வரை ஆடுவோம். விழுந்தால் மண்ணில் விழுவோம்'' என்று தொடங்கிய பாடல். இந்தப் பாடலின் இடையே வரும் வரிகள் இதுதான். ''நாளை என்பது இறைவனின் கையில். இன்று என்பது மனிதனின் கையில். வாழ்வது என்பது இயற்கை செய்த வேலை. இதில் கோழைகளுக்கு ஏதடா கவலை?'' என்று எழுதி இருந்தார் கண்ணதாசன். பாடல் வரிகள் அனைத்தும் டிஎம்எஸ்.சின் கம்பீரமான குரலில் உருவானது. எம்ஜிஆருக்கு அந்தப் பாடல் ரெக்கார்டிங் முடிந்ததும் அனுப்பி வைக்கப்பட்டது. குறிப்பாக கோழைகளுக்கு ஏதடா கவலை என்ற ஒற்றை வரி அவருக்கு புதுத்தெம்பை ஊட்டியது. படத்திலும் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
