கோபப்பட்டு கத்திய எம்.எஸ்.வி!.. பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. ஹிட் பாடல் உருவான கதை!...
1960களில் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவரின் இசையில் கவிஞர் கண்ணதாசன் பல நூறு பாடல்களை எழுதியிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி என்பது அலாதியானது.. அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்களை கேட்டால் மெட்டுக்கு பாடலா? அல்லது பாடலுக்கு மெட்டா? என்று கண்டுபிடிக்க முடியாதபடி ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும்.
இந்நிலையில்தன, ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற ‘சொன்னது நீதானா’ என்ற பாடல் உருவான கதை பற்றி பார்ப்போம்.
இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.. ஆறு பாடல்களையும் நீங்கள் வெளிநாடு சென்று எழுதி விட்டு வாருங்கள் என்று சொல்லி கண்ணதாசன், எம்.எஸ்.வி இருவரையும் வெளிநாட்டுக்கு ஸ்ரீதர் அனுப்பியிருக்கிறார். விமானத்தில் பறந்து அறைக்கு சென்றவுடன் ‘அண்ணா பாடலை எழுதலாமா?’ என்று எம்.எஸ்.வி கேட்க, கண்ணதாசனோ ‘இப்போதுதான் வந்திருக்கிறோம்.. குளித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
குளித்து முடித்து வந்தபின் ‘இப்போது பாடலை எழுதலாமா?’ என்று எம்.எஸ்.வி கேட்க ‘யாராவது குளிச்சவுடனே பாட்டு எழுதுவாங்களா?.. எனக்கு பயங்கரமாக பசிக்கிறது.. சாப்பிட்டுவிட்டு எழுதுவோம்’ என கண்ணதாசன் சொல்ல, ‘சரி சாப்பிடுவோம்’ என எம்.எஸ்.வி சொல்லியிருக்கிறார். அதற்கு ‘ நான் போடாம எப்ப சாப்பிட்டிருக்கேன்’ என சொல்லி மது அருந்தியிருக்கிறார் கண்ணதாசன். அதன்பின் இருவரும் சாப்பாடு சாப்பிட்டனர். அதன்பின் ‘இப்போது பாட்டெழுதலாமா?’ என எம்.எஸ்.வி கேட்க ‘இப்போதுதான் சாப்பிட்டு முடித்திருக்கிறேன்.. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி படுத்து தூங்கிவிட்டார் கண்ணதாசன்..
இப்படியே 5 நாட்கள் போய்விட்டதாம்.. கடைசி நாளில் சென்னையிலிருந்து இயக்குனர் ஸ்ரீதர் தொலைபேசியில் எம்.எஸ்.வியை தொடர்பு கொண்டு ‘பாடல்களை எழுதி முடித்து விட்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு ‘5 பாடல்கள் எழுதிவிட்டோம். இன்னும் ஒன்றுதான் பாக்கி’ என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாராம் எம்எஸ்வி..
அருகில் இருந்த கண்ணதாசனிடம் ‘இயக்குனர் போன் பண்ணிட்டார்.. இப்போதாவது பாட்டு எழுதலாமா?’ என்று எம்.எஸ்.வி கேட்க மீண்டும் கண்ணதாசன் ‘குளிச்சிட்டு வந்துடுறேன்’ என சொல்ல கடுப்பான எம்.எஸ்.வி ‘இனிமே உன்னுடைய பாட்டுக்கு நான் மியூசிக் போட மாட்டேன்’ என்று சொல்லி கத்தியிருக்கிறார்..
இதற்கு ‘சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே’ என்று சொல்லியிருக்கிறார் கண்ணதாசன். மேலும் ‘இதான்டா பல்லவி.. எழுதிக்கோ’ என சொல்லி பாடல் வரிகளை கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். இப்படித்தான் அந்த பாடல் உருவானதாக சொல்லப்படுகிறது.
