விஷாலின் 'சிவப்பதிகாரம்' படம் அல்ல, பாடம்... உண்மையை போட்டுடைத்த கரு.பழனியப்பன்!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய முதல் படமான 'பார்த்திபன் கனவு' 2003-ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இதில் ஸ்ரீகாந்த், சினேகா ஜோடியாக நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஸ்ரீகாந்தை வைத்து 'சதுரங்கம்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் ஃபைனான்ஷியல் பிரச்சனை காரணமாக தாமதமாக தான் வெளிவந்தது.
படமாக ரிலீஸ் ஆன வரிசையில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இரண்டாவது படம் 'சிவப்பதிகாரம்'. 2006-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷால், ரகுவரன், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இது கரு.பழனியப்பனுக்கு தோல்வி படமாக அமைந்தது. சமீபத்தில், இப்படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் கரு.பழனியப்பன் பேசுகையில் "வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு சரியாக வந்துவிட்டால் அது படம். சரியாக வரவில்லை என்றால் அது நமக்கு பாடம். படிச்சுட்டு அடுத்த படத்துக்கு நாம் சென்று விட வேண்டும்.
நான் மோசமாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைக்கவே இல்லை. படக்குழுவினர் எல்லாருமே நல்லா வேலை செஞ்சாங்க. அந்த படத்துல நான் செஞ்ச தவறு வந்து, அதுல கொலை நடக்கும் காட்சிகளை இன்னும் கவனமாக எடுத்திருக்கணும். கொலை முக்கியம் இல்லை, கொலைக்கான காரணம் தான் முக்கியம்ன்னு நான் தவறாக நினைத்து கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
