கே.எஸ்.ரவிகுமாரை 'புரியாத புதிர்' படத்தின் இயக்குநராக்கி அழகு பார்த்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி!
கோலிவுட்டில் உள்ள டாப் 5 ஹீரோக்களான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், 'உலக நாயகன்' கமல்ஹாசன், 'தளபதி' விஜய், 'தல' அஜித், சூர்யா என அனைவரையும் வைத்து படங்கள் எடுத்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.
இவரது இயக்கத்தில் வெளியான 'படையப்பா, சமுத்திரம், நாட்டாமை, முத்து, நட்புக்காக, வில்லன்' போன்ற பல படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காது. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் 'புரியாத புதிர்'.
ஆர்.பி.சௌத்ரியின் 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்த இந்த த்ரில்லர் ஜானர் படத்தில் ரகுமான், ரகுவரன், ரேகா, ஆனந்த் பாபு, சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில், இதன் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கொடுத்த பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி குறித்து பேசுகையில் "நான் டைரக்டர் விக்ரமன் சார்கிட்ட அவரோட முதல் படமான 'புது வசந்தம்'-ல இணை இயக்குநரா வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அதோட தயாரிப்பாளர் சௌத்ரி சார் தான்.
அந்த படம் முடிஞ்சு ரிலீஸுக்கு ரெடியாயிட்டு இருந்த டைம்ல, சௌத்ரி சார் என்னை கூப்பிட்டார். 'தர்கா'-ங்குற கன்னட படத்தோட தமிழ் ரைட்ஸ் வாங்கியிருக்கேன். கெஸ்ட் ஹவுஸ்ல போய் நீ அந்த படத்தை பாருன்னு சொன்னார். அவர் சொன்னதும் நானும் போய் அந்த படத்தை பாத்துட்டு வந்தேன்.
அப்புறம் படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டார். த்ரில்லிங்கா இருக்கு சார், ஆனாலும் போர் அடிக்குது சார்ன்னு சொன்னேன். அது போர் அடிக்காம, எனக்கு வந்து நீ ஒரு screenplay பண்ணிக்கொடு அந்த படத்துக்காகன்னு சொன்னார்.
நானும் பண்றேன் சார்ன்னு சொன்னேன். எவ்ளோ நாள் ஆகும் பண்ண?-ன்னு கேட்டார். நான் ஒரு வாரத்துல பண்ணி கொடுக்குறேன்னு சொன்னேன். சரி, peninsula hotel-ல ரூம் போடுறேன். நீ போய் பண்ணுன்னு சொன்னார். ஒரு 5 நாளைக்கு அப்புறம் போன் பண்ணி கதை ரெடியான்னு கேட்டார். நான் முடிச்சிட்டேன் சார், ஈவ்னிங் வந்தா கூட கேட்கலாம்ன்னு சொன்னேன்.
அப்புறம் வந்து என்கிட்ட கதை கேட்டுட்டு, ஒரிஜினல் கன்னட படத்துல ஒரு கொலை தான் நடக்கும். நீ இந்த கதைல இன்னொரு கொலைய சேர்த்திருக்க. அதுல சண்டை சீனே இல்ல, இதுல நீ 5 ஃபைட் சீன்ஸ் சேர்த்திருக்க. அதுல பாட்டே இல்ல, இதுல 4 பாடல்கள் சேர்த்திருக்க. அதுல காமெடி சீனே இல்ல, நீ 11 காமெடி சீன்ஸ் சேர்த்திருக்க, எல்லாமே நல்லா இருக்குன்னு சொன்னார்.
அப்புறம் இசையமைப்பாளர் S.A.ராஜ்குமாரை அனுப்புறேன், நீ இதுல இருக்குற பாடல்களோட situation சொல்லி tunes வாங்கிடுன்னு சொன்னார். சார், அதெல்லாம் டைரக்டர் தான் வாங்கணும், நான் எப்படி சாருன்னு சொல்ல, அவர் நீ தான்யா இந்த படத்துக்கு டைரக்டர்ன்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டாரு. நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.
அப்புறம் அடுத்த நாள் நேர்ல போய் அவரை சந்திச்சேன். எத்தனை நாள்ல இந்த படத்தை எடுப்ப?-ன்னு கேட்டார். இல்ல சார் நான் பண்ணல அப்படின்னு சொன்னதும் அவர் ஷாக்காயிட்டார். ஏன் பண்ணல?-ன்னு கேட்டதும், நான் சொன்னேன், சார் நான் பண்ற முதல் படம் எனக்கு திருப்தியா இருக்கணும்.
ஏன் நீ பண்ண screenplay உனக்கு திருப்தியா இல்லையா?-ன்னு கேட்டார். இல்ல சார், அது திருப்தியா இருக்கு, நீங்க எதிர்பாக்குற டேஸ்ட்ல இருக்கு. ஆனா, இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் சார். பெருசா ஓடாது. ஏன்னா repeated ஆடியன்ஸ் வர மாட்டாங்க. அப்போலாம், ஃபேமிலி ஆடியன்ஸ் & பெண்கள் இந்த மாதிரி படதுக்கெல்லாம் வர மாட்டாங்க. Gents ஆடியன்ஸ் மட்டும் தான் சார் இந்த படத்துக்கு வருவாங்கன்னு சொன்னேன்.
சரி எனக்கு பிடிக்குற மாதிரி இந்த படத்தை எடுத்துக்கொடு, அடுத்த படத்தை நானே உனக்கு தர்றேன்னு சொல்லி, அடுத்த படம் 'சேரன் பாண்டியன்' அவரோட தயாரிப்புலயே பண்ண சௌத்ரி சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனா, முதல் படமான புரியாத புதிருமே எனக்கு நல்ல பெயர் தான் வாங்கி கொடுத்துச்சு" என்று கூறியுள்ளார்.
