என் வாழ்க்கையில் அந்த ரெண்டு பேர்தான்... மனோரமா சொன்ன மறக்க முடியாத உண்மை!
1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய சாதனையைப் புரிந்தவர் நகைச்சுவை அரசி மனோரமா. அப்படிப்பட்ட சாதனையை செய்ய முடிந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் என் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் உதவிய ரெண்டு பேர் தான். அவங்க லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனும், கவியரசர் கண்ணதாசனும் என்று தெரிவித்துள்ளார் மனோரமா.
எஸ்எஸ்.ராஜேந்திரன் அண்ணனைப் பொருத்தவரைக்கும் என் ஜென்மத்துக்கும் அவரை மறக்க முடியாது. கடுகு மாதிரி இருக்குற கிராமத்துலயே தனியா ஒரு பொம்பளை வாழ்றது சிரமம்னா, கடல் மாதிரி இருக்குற சென்னையிலும் வாழ்றது எவ்வளவு கஷ்டம். ஒரு உடன்பிறப்பா இருந்து என்னைப் பார்த்துக் கொண்டவர், எஸ்எஸ்.ஆர். வாழ்க்கை முழுவதும் வலிகளையே சுமந்து கொண்டிருந்த எனக்கு காமெடி ரோல் கொடுத்து அதுதான் சரியா இருக்கும்னு எனக்குப் புரிய வைத்தவர் கவிஞர் கண்ணதாசன்.
நாடகத்துல ஹீரோயினனா நடிச்சிட்டு சினிமாவுல காமெடி பண்றோமேன்னு நான் மிகுந்த வருத்தத்தில் இருந்தேன். அவர் சொன்னது எவ்வளவு சரியானது அப்படி என்பது பின்னாளில் தான் எனக்குப் புரிந்தது. என்னோட கதாநாயகியாக நடித்த பல பேரை என்னால பார்க்க முடியல. நான் பல தலைமுறையைக் கடந்து நடிச்சேன்னா அதுக்கு முக்கியமான காரணம், அவங்க ரெண்டு பேரும்தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் மனோரமா.
