ஆவலோடு மாலை போட வந்த மக்கள்... கொக்கிப்பிடி கேள்வி கேட்ட எம்ஜிஆர்;...!
புரட்சித்தலைவர் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆனதுக்குப் பின்னால் வெளிவந்த திரைப்படம் தான் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்னாலேயே முடிந்து விட்டது. என்றாலும் அந்தப் படத்தின் டப்பிங் பணிகளை எம்ஜிஆர் முடிக்கவில்லை. அந்தப் படத்தின் டப்பிங் பணிகள் முடியாததன் காரணமாகவே பதவி ஏற்பு விழாவை 4 நாள்கள் ஒத்தி வைத்தார் எம்ஜிஆர்.
அப்போது வாஹினி ஸ்டூடியோவில் இருந்த டப்பிங் ஸ்டூடியோவில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்கான டப்பிங் பணிகளை எம்ஜிஆர் நிறைவு செய்தார். அப்போது இரவு 11 மணி. டப்பிங் தியேட்டரை விட்டு வெளியில வந்த உடனே அங்கே கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவருக்கு மாலை அணிவித்து பாராட்டினார்கள். அந்த மாலைகளை எல்லாம் சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்ட எம்ஜிஆர் அவங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
இந்த மாலைகள் எல்லாம் என்னுடைய திரைவாழ்க்கையின் முடிவுக்கா அல்லது என்னுடைய அரசியல் பயணத்தின் துவக்கத்துக்கா என்பதுதான் எம்ஜிஆர் அவர்களைப் பார்த்து கேட்ட கேள்வி. அவர்களை இந்த மாதிரி கேள்வியை கேட்டுட்டு பதிலையும் நானே சொல்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார் எம்ஜிஆர். இந்த சினிமா வாழ்க்கைக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். எதுக்குன்னா கிடைச்ச வாழ்க்கையை காப்பாத்திக்கிறதுக்காக. அரசியலைப் பொறுத்தவரைக்கும் நான் அரசியலுக்கு விரும்பி வரல. ஒரு சபதத்துல வந்தேன்.
சில பேர் அதிகாரம் தன் கையில் இருக்கிறதே பிறரை அழிக்கிறதுக்கு அப்படின்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க. இல்ல. அரசியல் அப்படிங்கறது மத்தவங்களை கௌரவிக்கிறதுக்கும், காப்பாத்துவதற்கும் தான் அப்படின்னு காட்டுறதுக்குத்தான் இதுல குதிச்சேன். இன்னைக்கு நான் வெற்றி அடைஞ்சிட்டேன். சினிமா வாழ்க்கையில ராஜாவா மட்டும் இல்ல. மகாராஜாவா கூட நான் இருந்துருக்கேன்.
நாளை முதல் நான் அடையப்போவது மந்திரி பதவி தான். மந்திரிங்கறது என்ன இருந்தாலும் ராஜாவுக்குக் கீழே தானே. அப்படின்னு சொன்ன எம்ஜிஆர் கடைசில சொன்ன வார்த்தைதான் ரொம்ப முக்கியம். இது ஒரு தற்காலிக பிரிவுதான். நான் மீண்டும் வருவேன்னு அவங்க நடுவில பேசினார் எம்ஜிஆர். மீண்டும் திரைப்படங்கள்ல நடிப்பதாகத்தான் அவரது ஆசை இருந்தது. ஆனால் காலம் அதற்கு அவரை அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை.
