எம்ஜிஆர் கொடுத்த யோசனை... சிவாஜி ஏற்ற பதவி... அப்புறம் நடந்ததுதான் விசேஷம்!
நடிகர் சங்கத்துக்கு என்று தனியாக ஒரு கட்டடம் உருவானது என்றால் அது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிகர் சங்க தலைவராக இருந்த காலகட்டத்தில் தான். அந்த சங்கத்தில் தலைவராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து தன் சுயசரிதை நூலில் மிக விளக்கமாகத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
அப்போது எம்ஜிஆர் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தார். நடிகர் சங்கத்துக்கு யாரைத் தலைவராகப் போடுவது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சிவாஜியைப் பிடிங்க. அவர்தான் இதுக்கு சரியான ஆளு. முதல்ல மாட்டேன்னு சொல்வாரு. ஆனா விடாதீங்க. கெட்டியாகப் பிடித்து அவரைத் தலைவராக ஆக்கி விடுங்கள் என்று எம்ஜிஆர் பலரிடம் சொல்லி இருக்கிறார். அவர் இப்படி சொன்ன உடனே மற்றவங்க விடுவாங்களா?
அவங்க எல்லாரும் என்னைத் தேடி வந்தாங்க. அண்ணன் இப்படி சொல்றாருன்னு எங்கிட்ட சொன்ன உடனே, அவர் சொன்னதுக்காகவும், மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காகவும் அந்த சங்கத்தின் தலைவர் பொறுப்பை நான் ஏற்றேன். நடிகர் சங்கத்துக்குத் தலைவர் ஆனால், அந்த சங்கத்துக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால நடிகர் சங்கத்துக்கு ஒரு கட்டடமும், நாடக அரங்கமும் கட்ட வேண்டும் என்று நான் நினைத்தேன்.
அந்தக் கட்டடம் கட்டுவதற்கு எம்ஏஎம்.ராமசாமி, நடிகர் நாகேஸ்வரராவ், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பலரும் உதவினர். அந்தக் கட்டடத்தை நான் கட்டி முடிச்ச உடனே, இவனை எப்படி இந்த சங்கத்தை விட்டு வெளியேற்றுவது? என்று சிலர் யோசிக்கத் தொடங்கினர். ஒரு காலகட்டத்தில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். நான் நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியே வந்து விட்டேன்.
என் வாழ்க்கையில இதெல்லாம் புதுசு இல்லை. விதைக்கும்போது என்னைப் பக்கத்துல வச்சிக்குவாங்க. ஆனா அறுவடையின்போது, நான் இல்லாம பார்த்துக்குவாங்க. இதெல்லாம் எனக்குப் பழக்கமாகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் திலகம் சிவாஜி.
