திருமணத்துக்காக 16 ரூபாய் கேட்ட கதாசிரியர்... எம்ஜிஆர் செய்ததோ தரமான சம்பவம்!
மக்கள் திலகம் எம்;ஜிஆர் இயக்கத்தில் உருவான நாடோடி மன்னன் படத்துக்கு கண்ணதாசனோடு இணைந்து வசனம் எழுதியவர் ரவீந்தர். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது கதாசிரியர் ரவீந்தருக்கு திருமணம் நிச்சயமானது. நாடோடிமன்னன் வெளியீட்டுக்குப் பின்னால் திருமணத்தை வச்சிக்கோங்க. ஜமாய்ச்சிடலாம்னு எம்ஜிஆர் ரவீந்தரிடம் சொன்னார்.
நாடோடி மன்னன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னால் எம்ஜிஆர் வீட்டுக்கு ஒருநாள் சென்றார் ரவீந்தர். அவரைப் பார்த்த உடனே எம்ஜிஆரின் சகோதரரான சக்கரபாணி, என்னப்பா திருமணம் நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்ததே. எப்போ திருமணம்? முடிவு பண்ணிட்டீங்களான்னு கேட்க, முடிவு பண்ணிட்டோம். அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேச வந்தேன் என்றார் ரவீந்தர். அப்படியா உனக்கு என்ன வேண்டும் என்று சக்கரபாணி கேட்க, எனக்கு 16 ரூபாய் வேண்டும் என்றார்.
அவர் 16 ரூபாய் என்ற உடன் 16 ஆயிரம் ரூபாய் கேட்கிறாரோ என்று தவறாக எடுத்துக் கொண்டார் சக்கரபாணி. நாடோடி மன்னன் நல்லா ஓடுச்சுன்னு பேரு வந்ததே தவிர பெரிசா பணம் வரலப்பான்னு சக்கரபாணி சொன்னார். முதலாளி, நான் 16 ஆயிரம் ரூபாய் எல்லாம் கேட்கல. எனக்கு 16 ரூபாய் மட்டும் தான் வேணும் என்றார் ரவீந்தர். அவர் அப்படி சொன்ன உடனே கலகலவென சிரித்த எம்ஜிஆர், 16 ரூபாய்க்கு ஒரு பிளேட் பிரியாணி கூட வாங்க முடியாதே.
எப்படி அந்த ரூபாய்க்கு நீ கல்யாணத்தை நடத்துவன்னு கேட்டார். எங்களுடைய வழக்கப்படி தாலி செய்வதற்கு 1 கிராம் தங்கம் இருந்தால் போதும். அதோட விலை 16 ரூபாய் தான். மத்தபடி எங்கிட்ட கல்யாணம் பண்ண பணம் இருக்கு என்றார் ரவீந்தர். அவர் அப்படி சொன்னதும் அவர் கேட்ட மாதிரியே 16 ரூபாயை எடுத்து வந்து கொடுக்காம, 10 ஆயிரம் ரூபாய் கட்டை எடுத்து வந்து அண்ணன் சக்கரபாணியிடம் கொடுத்து, ரவீந்தரிடம் கொடுத்துருங்க என்றார் எம்ஜிஆர். கொடுத்துட்டு எம்ஜி.சக்கரபாணி உள்ளே போன உடனே, ரவீந்தர் எம்ஜிஆரிடம் தன்னோட வருத்தத்தை சொன்னார்.
இந்த பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு எதிர்பார்த்தேன். அண்ணன் கையால கொடுத்துட்டீங்களே என்றார் ரவீந்தர். அவர் அப்படி சொன்ன உடனே, ஏன் அண்ணன் கையால கொடுக்கச் சொன்னேன்னு தெரியுமா? அவன் புள்ளக்குட்டிக்காரன். எனக்கு பிள்ளையே இல்லைன்னு உனக்கு தெரியும்தானே என்றார். அவர் அப்படி சொன்ன உடனே ரவீந்தரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவரைக் கட்டி அணைத்து சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார் எம்ஜிஆர். தன்கிட்ட பணியாற்றுபவர்களிடம் எந்தளவு பாசமும், நேசமும் வைத்து இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் இன்னொரு உதாரணம்.
