கிறிஸ்துமஸ் கொண்டாட காலணா இல்லாமல் தவித்த சந்திரபாபு... எம்ஜிஆர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!
எல்லோருடைய வாழ்க்கையிலும் இரவும் வரும். பகலும் வரும். ஆனா சந்திரபாபு வாழ்க்கையில் மட்டும் அவரது சில நடவடிக்கைகள் காரணமாக ஒரு காலகட்டத்தில் அவரது வாழ்க்கையே இருண்டு போய் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில தான் அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட கேக் வாங்கவோ, புதுத்துணி வாங்கவோ சந்திரபாபு கையில காலணா இல்லை. அப்படிப்பட்ட நேரத்துல அவரது வீட்டுக்கதவு தட்டப்பட்டது.
சந்திரபாபு தம்பி கதவைத் திறந்தபோது வெளியில் நின்றிருந்த நபர் ஒரு பெரிய பாக்ஸை அவர் கையில் கொடுத்தார். இதை ஐயா உங்கக்கிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னார்னு சொல்லிவிட்டு அவர் கிடுகிடுவென போய்விட்டார். யார் அந்த ஐயான்னு சந்திரபாபு பார்க்குறதுக்குள்ள அவர் காரில் ஏறிப் பறந்து விட்;டார். சந்திரபாபு தம்பி ஜவஹர் அந்த பாக்ஸை அண்ணன் கையில் கொடுத்த போது பிரிச்சிப் பாருன்னு சொன்னார். அந்தப் பாக்ஸை பிரித்தார்.
அதில் மிகப்பெரிய ஸ்பென்சர் கேக் இருந்தது. கூடவே ஒரு கவர். அதுக்குள்ள 5000 ரூபாய் பணம். யாரு அந்தப் பரிசை அனுப்பிச்சிருப்பாங்கன்னுனு சந்திரபாபு யோசித்தார். நெருங்கிய நண்பன் யாராவது தான் நம்மோட கஷ்டத்தை தெரிஞ்சிக்கிட்டு அனுப்பிருப்பான்னு நினைக்காரு. ஜெமினிகணேசன், சாவித்ரி, இல்லன்னா ஏஎல்.சீனிவாசன்னு பல பெயர்கள் அவரது மனதில் வந்து வந்து போனது. ஆனால் உண்மையிலேயே அவருக்கு யார் பணத்தை அனுப்பி வச்சாரோ அவரது பெயர் மட்டும் சந்திரபாபுவின் மனதில் வரவே இல்லை.
அதுக்குக் காரணம் சந்திரபாபுவுக்கும், அவருக்கும் அந்தக் காலகட்டத்துல இருந்த மனக்கசப்பு. சந்திரபாபு பிரச்சனையில இருக்காருன்னு தெரிந்து கொண்டு அவருக்கு அந்தப் பரிசை அனுப்பி வைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். கேக் அனுப்பியது மட்டுமல்ல. அதுக்குப் பின்னாலும் பல உதவிகளைச் சந்திரபாபுவுக்காக செய்தவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
