எம்.ஜி.ஆர் உருவாக்கிய மருத்துவர்!. அவருக்கே மருத்துவம் பார்த்த நெகிழ்ச்சி பிளாஷ்பேக்!...
நடிகர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக மட்டுமில்லாமல் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் இருந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் பெருமளவு அவர் மக்களுக்கே கொடுத்தார். ஒவ்வொரு நாளும் அவரின் ராமாபுரம் தோட்டத்தில் உதவிகளை பெறுவதற்காக பொதுமக்கள் பலரும் வருவார்கள்.
திருமணம், படிப்பு, மருத்துவம் என பல தேவைகளுடன் செல்லும் அவர்கள். எம்.ஜி.ஆரிடம் கேட்டால் உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அங்கே வந்து நிற்பார்கள். எம்.ஜி.ஆரும் முடிந்தவரை அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதுண்டு.. பணத்தை அள்ளிக் கொடுப்பதும் உண்டு..
அப்படி அங்கே ஒரு தாய், தந்தை மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து ‘என்ன விஷயம்?’ என்று எம்.ஜி.ஆர் கேட்க ‘இவனுக்கு நீங்கள் பேர் வைக்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்கள். ‘இதுவரை இவனை என்ன பெயர் வைத்து அழைத்தீர்கள்?’ என எம்.ஜி.ஆர் கேட்க, சிறுவனின் தந்தை ‘5 வருடங்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் உங்களின் மலைக்கள்ளன் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போன போதுதான் இவன் பிறந்தான்.. எனவே மலைக்கள்ளன் என்று பெயரை வைத்துவிட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு சிரித்த எம்ஜிஆர் ‘இந்த பெயரே நன்றாகத்தான் இருக்கிறது.. இதுவே இருக்கட்டும்’ என்று சொல்லி தன் பாக்கெட்டிலிருந்து 100 ரூபாய் நோட்டை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்...
அந்த தந்தை தன் வசிகும் கிராமத்திற்கு சென்று எம்ஜிஆர் கொடுத்த 100 ரூபாய் பணத்தை காட்ட ‘இதை செலவு செய்யாதே.. பிரேம் போட்டு வைத்துக் கொள்’ என அவரின் நண்பர்கள் சொல்ல அவரும் பிரேம் போட்டு வைத்து விட்டார். அதப்பின் 12 வருடங்களுக்கு பின் அந்த சிறுவன் இளைஞனாக மாறியிருந்த போது மீண்டும் அவர்கள் எம்.ஜி.ஆரை சந்திப்பதற்காக ராமாபுரம் தோட்டத்திற்கு போயிருக்கிறார்கள். அப்போது எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். அவருக்கு பழைய சம்பத்தை நினைவு படுத்துவதற்காக அந்த நூறு ரூபாய் பிரேமையும் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். அந்த பக்கம் அந்த எம்.ஜி.ஆர் அவர்களையும், கையில் வைத்திருந்த அந்த பிரேமையும் பார்த்ததும் அவர்கள் யார் என தெரிந்து கொண்டார்.
உடனே ‘ மலைக்கள்ளன் இங்கே வா’ என்று அழைத்திருக்கிறார். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தாங்க முடியவில்லை.. ’ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? எதற்காக இங்கே வந்தீர்கள்?’ என எம்.ஜி.ஆர் கேட்க ‘இவனுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது ஆசை.. ஆனால் ஒரே ஒரு மதிப்பெண்ணில் இவனுக்கு சீட் கிடைக்காமல் போய்விட்டது.. நீங்கள் உதவ வேண்டும்’ என்று சொல்லி மாணவனின் தந்தை சொல்லியிருக்கிறார். அருகில் இருந்த அந்த உதவியாளிடம் மருத்துவ சீட் பற்றி விசாரிக்க தமிழ்நாட்டில் அனைத்து சீட்களும் முடிந்துவிட்டது தெரியவந்தது. உடனே ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘எனக்கு தெரிந்தவருக்கு ஒரு மருத்துவ சீட்டு வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர் கேட்க ‘இதையெல்லாம் கேட்க வேண்டுமா?.. சீட் தயாராக இருக்கிறது.. அனுப்பி வையுங்கள்’ என்று அவர் சொல்ல அந்த மாணவன் ஆந்திராவுக்கு சென்று மருத்துவம் படித்திருக்கிறார்..
பின்னாளில் எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கே அவருக்கு ஜப்பானிய மருத்துவர் ஷான் என்பவர் சிகிச்சையளித்தார். இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த ஷானுக்கு உதவியாளராக இருந்தவர் எம்.ஜி.ஆர் சீட் வாங்கி கொடுத்து மருத்துவம் படித்த மருத்துவர் மலைக்கள்ளன்.
