வாலியின் பாடலைக் கூச்சத்தோடு மறுத்த எம்ஜிஆர்... அப்புறம் நடந்தது இதுதான்!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்றெல்லாம் வாலி எழுதிய பல பாடல்கள் எம்ஜிஆரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற பாடல்களாக அமைந்தன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அது போன்ற பல பாடல்களை எம்ஜிஆருக்கு எழுதிய வாலி, இதுபோன்ற பாடல்களை எழுதுங்கன்னு என்னிடம் ஒருநாளும் கேட்டுக்கொண்டதில்லை.
இதெல்லாம் நான் தன்னிச்சையாக புனைந்த பாடல்கள். இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால், வள்ளல், மன்னன் என்றெல்லாம் தன்னைப்பற்றி எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்து இருக்கிறார். அவர்பால் இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவருடைய உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்ததாலும் நான்தான் அவரைப் பற்றி அப்படிப் போற்றிப் புகழ்ந்து பாடல்களை எழுதினேன்.
ஒரு காலகட்டத்திலே நான் அவருக்காக எழுதிய ஒவ்வொரு வரியும் அப்படியே பலிக்க ஆரம்பித்தது. தமிழிலே ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். உங்க சொல் என்றும் செல்லும் சொல்லாகவே இருக்க வேண்டும். நானே அனுபவப்பூர்வமாகப் பார்த்து இருக்கிறேன்.
உங்க வாக்கு அப்படியே பலிக்கிறது. அதனால் நீங்க யாருக்குப் பாடல் எழுதினாலும் அவர்களைப் புகழ்ந்து தான் எழுத வேண்டுமே தவிர அவர்களை இகழ்ந்தோ அல்லது அவர்களைக் குறைசொல்லியோ எந்த பாட்டையும் எழுதவே கூடாது என்று என்னிடம் எம்ஜிஆர் பலமுறை சொல்லி இருக்கிறார் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் கவிஞர் வாலி.
