கல்வியைப் பற்றி பேசி கண்கலங்க வைத்த எம்ஜிஆர்... இனியாவது நல்லா படிங்க பாஸ்!
எம்ஜிஆர் ஒரு கல்லூரிக்கு சென்றார். அவர் பேசியது சில வார்த்தைகள் தான். மாணவர்களே, நான் இன்று முதல் இந்திராகாந்தி முதல் அமெரிக்க அதிபர் வரை பேசும் செல்வாக்கு உடையவன். என்னை தினமும் சந்திக்க காத்துக்கிடக்கும் கோடீஸ்வரர்கள் ஏராளம். உதவி பெற வரிசையில் நிற்பவர்கள் ஏராளம்.
தினமும் என் வீட்டில் பசியாறுபவர்களும் ஏராளம். அப்படிப்பட்ட என்னால் வாங்க முடியாதது கல்வி. இன்று மாகாண முதல்வர் என்றாலும் என் கல்வி நிலை 4ம் வகுப்பு தான். எனக்கும் படிக்கும் ஆசை இருந்தது. ஆனால், அதைவிட பல மடங்கு வறுமை வீட்டில் இருந்தது. எனவே நடிக்க வந்து விட்டேன். எனக்கு மட்டுமல்ல. உலகில் எத்தனையோ பேருக்கு கிடைக்காத பாக்கியம் கல்வி. அது உங்களுக்குக் கிடைத்து இருக்கிறது. அரசியல் எப்போதும் செய்யலாம்.
உரிமைகளை எப்போதும் கோரலாம். ஆனால், படிப்பு உரிய காலத்தில் இல்லாவிட்டால் படிக்க முடியாது. என் செல்வங்களே, எனக்கு கிடைக்காத கல்வி உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அதை நல்ல முறையில் படித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனுள்ள மனிதர்களாக வாழுங்கள். அதுதான் இந்த அரசின் முதல் கடமை.
அதனால் தான் இன்றளவும் காமராஜரை என் வழிகாட்டியாகக் கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு என சோறு போட்டு படிக்க வைக்கும் முயற்சியை எடுக்கிறேன். எனக்கும் அன்று இப்படி சோறு போட ஒரு அரசு இருந்து இருந்தால், 4ம் வகுப்பைக் கூட தாண்டாதவன் என்ற அவமானத்தோடு உங்கள் முன் நின்று கொண்டு இருக்க மாட்டேன் என்றார் எம்ஜிஆர். அவர் அப்படி பேசியதும் அரங்கமே கப்சிப் என்று இருந்தது. மாணவர்கள் உண்மையை உணர்ந்தனர். அவர்களைப் பெற்றவர்கள் கையெடுத்து எம்ஜிஆரை வணங்கினர். இப்படி மக்களின் மனதைத் துல்லியமாக அவர் அறிந்து வைத்து இருந்ததால் தான் மக்கள் திலகம் ஆனார்.
