டப்பு தான் முக்கியம்... அப்புறம் தான் கதாபாத்திரம் எல்லாம்..! பளிச்சுன்னு சொன்ன எம்ஆர்.ராதா!
நடிகவேள் எம்ஆர்.ராதாவுடன் மிக நெருக்கமாகப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றவர் பத்திரிகையாளர் நவீனன். ஒருமுறை தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்பில் எம்ஆர்.ராதா நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது, எம்ஆர்.ராதாவைத் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக அங்கே வந்தார் சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜிஎன்.வேலுமணி. எம்ஆர்.ராதாவைப் பார்க்க வந்தவர் சும்மா வரல. கையில கட்டாகப் பணத்தோடு வந்து இருந்தார்.
அவர் வந்த உடனே, எப்போ அடுத்த படத்தை ஆரம்பிக்கப் போறீங்க? அப்படின்னு கேட்ட எம்ஆர்.ராதா, கொடுங்க முன் பணத்தை அப்படின்னு சொல்லி அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டார். உங்க படத்துல நடிக்க மாட்டேன்னு சொல்வேனா... நிச்சயமா உங்க படத்துல நடிக்கிறேன். எப்ப கால்ஷீட் இருக்கோ, அப்போ பேசிக்கலாம்னு சொல்லி அவரை அனுப்பி வைத்தார் எம்ஆர்.ராதா. இதைப் பக்கத்துல இருந்து பார்த்த நவீனனுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
அந்தப் படத்திலே என்ன மாதிரியான கதாபாத்திரம்னு எல்லாம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் நீங்க பாட்டுக்கு பணத்தை வாங்கி வச்சிட்டு நான் நடிக்கிறேன்னுட்டீங்களே. எப்படி என்று அவரைப் பார்த்துக் கேட்டார் நவீனன். என்னுடைய கதாபாத்திரத்தில் என்ன புதுமை இருக்கப் போகுது? ஒரு பணக்காரப் பொண்ணுக்கு நான் அப்பாவா இருப்பேன். அவன் ஒரு ஏழைப் பையனைக் காதலிப்பா. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். இல்லையா, ஒரு பணக்காரப் பையனுக்கு நான் அப்பாவா இருப்பேன்.
அவன் ஒரு ஏழைப்பொண்ணைக் காதலிப்பான். அதுக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். இது மாதிரி படங்கள்ல தான நான் தொடர்ந்து நடிச்சிக்கிட்டு இருக்கேன். அது மாதிரி இதுவும் ஒரு படமா இருக்கப் போகுதுன்னு சர்வ சாதாரணமாகச் சொல்லி சிரித்து இருக்கிறார் எம்ஆர்.ராதா. ஒரு படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி அந்தப் படத்துல என்னுடைய சம்பளம் என்னங்கறதுதான் முக்கியமான கேள்வியா இருக்கும்.
தவிர, என்ன மாதிரியான கதாபாத்திரத்துல நடிக்கப் போறேன் அப்படிங்கறது என்னுடைய முக்கியமான கேள்வியாக என்றைக்கும் இருந்ததில்லை என்று நவீனனிடம் அவர் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது அப்படியே எம்ஆர்.ராதாவைப் பற்றி ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் பத்திரிகையாளர் நவீனன்.
