படப்பிடிப்பில் கடுப்பைக் கிளப்பிய பானுமதி... பதிலுக்கு எம்ஜிஆர் வைத்த ஆப்பு!
எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் படத்தில் பானுமதி நீக்கப்பட்டார். இதற்கு உண்மையான காரணம் என்ன? வாங்க பார்க்கலாம்.
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று தமிழ்சினிமா உலகினரால் பாராட்டப்பட்டவர் பானுமதி. அவங்களைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாடோடி மன்னன் படத்தில் பல விஷயங்கள்ல அவருக்கும் எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருந்தன. பாடல் கம்போசிங் போனா, இந்தப் பாட்டு நல்லா வரும்னு எம்ஜிஆர் சொன்னா, இல்ல. இல்ல. இந்தப் பாட்டு சரியா வராதுன்னு சொல்வாங்க பானுமதி.
அதே மாதிரி தான் படப்பிடிப்பு தளத்திலும். ஒரு காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காகத் திரும்ப திரும்ப அந்தக் காட்சியை எடுத்தாருன்னா, எதுக்கு நீங்க இந்தக் காட்சியைத் திரும்ப திரும்ப எடுத்துக்கிட்டு இருக்கீங்க. நீங்க டைரக்ஷன்ல புதுசு. அதனாலதான் திரும்ப திரும்ப எடுத்துக்கிட்டு இருக்கீங்க. ஒரு நல்ல டைரக்டரைப் போட்டு எடுத்துருந்தீங்கன்னா நல்லாருந்து இருக்கும்னு எம்ஜிஆர்கிட்டேயே சொன்னவர் பானுமதி.
அப்படி தொடர்ந்து விமர்சிக்கின்ற ஒரு நடிகையைப் பக்கத்துல வச்சிக்கிட்டு எப்படி படப்பிடிப்பு நடத்த முடியும்? அதன் காரணமாகத்தான் பானுமதியை அந்தப் படத்துல இறந்துவிடுவதாகக் காட்டிவிட்டு, சரோஜாதேவியை இன்னொரு கதாநாயகியாக சேர்த்தார் எம்ஜிஆர். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
