12 நாட்கள் ஷூட்டிங் நடந்தும் டிராப்பாகி வலியைக் கொடுத்த அஜித் சாரின் 'மகா'... இயக்குநர் நந்தா பெரியசாமி உருக்கம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் எப்போதும் இருப்பவர் தான் நம்ம 'தல' அஜித்குமார். இவரது கார் ரேஸிங் ஆவணப் படமான 'Gladiators' வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 'குட் பேட் அக்லி' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் 'AK64' படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.
அஜித் போலீஸாக 'ஆஞ்சநேயா, என்னை அறிந்தால்' போன்ற படங்களில் நடித்திருந்தார். அவர் போலீஸ் ரோலில் நடிக்கவிருந்த முதல் படம் டிராப்பானது குறித்து அந்த படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமியே சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்த உருக்கமான பதிவில் "நான் முதன் முதலாக இயக்கிய படம் 'மகா'. அதன் நாயகன் 'தல' அஜித் சார் தான். இப்படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து 8 நாட்கள் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, அஜித் சாரின் கால் எலும்பு முறிந்தது.
பின், அவர் நீண்ட ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்தார். அடுத்த 4 நாட்கள் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால், வலி காரணமாக அஜித் சாரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. அந்த நேரத்தில் அஜித் சாருக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் 'நிக் ஆர்ட்ஸ்' எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மொத்தம் 12 நாட்கள் படப்பிடிப்புடன் 'மகா' படம் நிறுத்தப்பட்டது.

இந்த படத்திற்கு பாடலாசிரியர் - வைரமுத்து சார், இசை - ஹாரிஸ் ஜெயராஜ் சார், வசனம் - பாலகுமாரன் சார், கலை இயக்குநர் - தோட்டா தரணி சார், ஸ்டன்ட் இயக்குநர் - கனல் கண்ணன் சார் என மிகப் பெரிய கூட்டணி கிடைத்தும், படம் தொடராமல் என் கனவு முடிந்தது.
இன்னமும் கரு கலைந்த ஒரு தாயின் வலி தொடர்கிறது. ஒரு வேளை இந்த படம் எனது முதல் படமாக இருந்திருந்தால், சினிமாவில் எனது graph வேறு மாதிரி உயர்ந்திருக்கும். முதன் முதலாக அஜித் சார் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்றது 'மகா' படம் என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறியுள்ளார்.
'மகா' டிராப்பான பிறகு இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான முதல் படம் 'ஒரு கல்லூரியின் கதை'. இதில் ஆர்யா, சோனியா அகர்வால் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு 'மாத்தியோசி, அழகன் அழகி, வண்ண ஜிகினா, ஆனந்தம் விளையாடும் வீடு, திரு.மாணிக்கம்' ஆகிய படங்களை இயக்கினார் நந்தா பெரியசாமி .
