Nayagan: நாயகன் படத்தால் நஷ்டம்தான்!.. ஒரு லாபமும் இல்லை!..தயாரிப்பாளர் மகள் பேட்டி..
மணிரத்னம இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம்தான் நாயகன். இந்த திரைப்படத்தை முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மும்பையில் தமிழர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த வரதராஜ முதலியாரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை மணிரத்னம் உருவாக்கியிருந்தார். இளைஞன், நடுத்தர வயது, முதியவர் என பல தோற்றங்களிலும் கமல் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார்.
கமல் மற்றும் மணிரத்னம் இருவரின் திரை வாழ்விலும் நாயகன் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். தற்போது வரை தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக நாயகன் இருக்கிறது. சினிமாவை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இந்த திரைப்படம் இருக்கிறது.

அதேநேரம், வியாபாரரீதியாக இந்த படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்ததா என்றால் இல்லை. இந்த படத்தை தயாரித்திருந்த முக்தா சீனிவாசனின் மகள் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நாயகன் படம் உருவான போது பட்ஜெட் 50 லட்சம் என முடிவு செய்து ரூ.10 லட்சம் லாபம் வைத்து 60 லட்சத்திற்கு வியாபாரம் செய்துவிட்டோம். ஆனால், படம் முடியும்போது ஒரு கோடியை தொட்டுவிட்டது.
இந்த படத்தில் இடம் பெற்ற நான் சிரித்தால் தீபாவளி பாடலை மும்பையில் உள்ள தாராவியில் எடுக்க திட்டமிட்டோம். ஆனால், கூட்ட நெரிசல் காணமாக அங்கே எடுக்க முடியவில்லை. எனவே, சென்னையிலேயே 25 லட்சம் செலவில் தோட்டா தரணி செட் போட்டார். படத்தின் பாதி பட்ஜெட் அந்த பாட்டிலேயே போய்விட்டது’ என அவர் கூறியிருக்கிறார்.
நாயகனோடு வெளிவந்த ரஜினியின் மனிதன் திரைப்படம் நாயகனை விட அதிக வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
