பத்மினி, சரோஜாதேவி, சாவித்திரி ரசிகரா நீங்க? மூவரில் வித்தியாசமானவர் யாரு?
அந்த காலத்தில் கதாநாயகிகள் என்றால் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கவர்ச்சியாக நடித்தால் கூட அதில் விரசம் இருக்காது. ஆபாசம் துளியும் இருக்காது. அதே நேரம் கலாரசனை இருக்கும். அதனால் ஒரு படத்தை எடுத்துக்கொண்டால் யார் ஜோடின்னு கேட்டுத் தான் ரசிகர்கள் படம் பார்க்கவே செல்வார்கள்.
அந்த வகையில் பத்மினி, சரோஜாதேவி, சாவித்திரி மூவரும் ஒரு காலகட்டத்தில் தமிழ்த்திரை உலகில் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வந்தனர். தங்கள் திறமையால் ஒருவருக்கு ஒருவர் சற்றும் சளைத்தவர் அல்ல என்று நிரூபித்தனர். அது ஆரோக்கியமான போட்டியாக இருந்ததால் தமிழ்த்திரை உலகம் ரசிக்கும்படியாக பல படங்களைத் தந்தது. அந்த வகையில் இவர்களைப் பற்றிய ஒரு சிறப்பான தகவலைப் பார்க்கலாம்.
பத்மினி, சரோஜாதேவி, சாவித்திரி இந்த 3 பேருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்ற இந்தக் கேள்வியை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
பத்மினி, சாரோஜாதேவி, சாவித்திரி ஆகிய 3 பேருமே சிறந்த நடிகை. இதுல பத்மினி, சாவித்திரி இருவரும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள்ல நடிச்சாங்கன்னா ரொம்ப நல்லாருக்கும். ஆனா அவங்களே கவர்ச்சிகரமான கதாபாத்திரத்துல நடிச்சா அவ்வளவு நல்லாருக்காது. ஆனா அதுல சரோஜாதேவி விதிவிலக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு பக்கம் உணர்ச்சிப்பூர்வமாகவும் அவரால நடிக்க முடியும். இன்னொரு பக்கம் கவர்ச்சி கதாநாயகியாகவும் அவரால் நடிக்க முடியும். அப்படி நடித்து வெற்றி கண்டவர்தான் சரோஜாதேவி என்கிறார் சித்ரா லட்சுமணன்.
