ரஜினி சாரும் நானும் சேர்ந்து நடிக்க அவரே ஒரு கதை சொன்னார், ஆனா... பார்த்திபன் சொன்ன சுவாரஸ்யத் தகவல்!
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் இப்போது தொடர்ந்து இளம் இயக்குநர்களை டிக் அடித்து படங்கள் பண்ணி வருகிறார். அவர் இப்ப மட்டுமல்ல, எப்பவுமே ஒரு இயக்குநர் நல்ல படம் பண்ணி விட்டார் என்றால், உடனே அவரிடம் தனக்கு செட்டாகும் வகையில் கதை இருந்தா சொல்லுங்க, நாம சேர்ந்து பண்ணுவோம் என்று சொல்லக்கூடிய மனசு நம்ம தலைவர் ரஜினியிடம் இருக்கிறது.
அப்படி பார்த்திபன் திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும் என்ட்ரி ஆன பிறகு அவருடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என விரும்பியிருக்கிறார் ரஜினி. சமீபத்தில், பார்த்திபன் கொடுத்த பேட்டியில் இது குறித்து பேசுகையில் "அப்பலாம் நானும் ரஜினி சாரும் அடிக்கடி சந்திச்சு பேசுவோம். அதுவும் விடிய விடிய பேசுவோம்.
அப்போ, அவர் என்கிட்ட கேட்பாரு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுனா எப்படி இருக்கும்?-ன்னு. அப்புறம் அவரே ஒரு கதை பண்ணி, என்கிட்ட சொன்னாரு, நீங்க இதை டைரக்ட் பண்ணி என்கூட சேர்ந்து நடிங்கன்னு.
அந்த டைம்ல தான் நான் நடிச்சு, இயக்கின 'உள்ளே வெளியே' படம் வந்து ஓடிட்டு இருக்கு. நான் அவரை ஒரு தியேட்டருக்கு கூட்டிட்டு போய் அந்த படத்தை ரெண்டு பேரும் சேர்ந்து பாக்குறோம். அப்புறம் படம் முடிஞ்சு, வீட்டுக்கு போன பிறகு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க முடியாது பார்த்திபன். நீங்க கேமராவுக்கு பின்னாடி இருந்து டைரக்ட் மட்டும் பண்ணுங்கன்னு சொன்னார்.
என்ன சார் இப்படி சொல்றீங்க?-ன்னு நான் கேட்டேன். அதுக்கு அவர் 'உள்ளே வெளியே' படத்துல உங்க acting பயங்கரமா இருக்கு பார்த்திபன். இந்த விளையாட்டுக்கு நான் வரத் தயாரா இல்ல. நான் ரொம்ப ஜாக்கிரதையான மனுஷன் தெரியுமா உங்களுக்குன்னு சொன்னார்" என்று கூறியுள்ளார்.
