எம்.ஜி.ஆர் அழுததை அன்றுதான் பார்த்தேன்!.. கவிஞர் புலமைப்பித்தன் பேட்டி...
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன் 60களில் சூப்பர் ஸ்டார் இவர்தான். இவர் நடித்த அனைத்து படங்களுமே வசூலை குவித்தன. தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அதன் பின் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி உச்சம் தொட்டவர்தான் எம்.ஜி.ஆர்.
தொடக்கத்தில் திமுகவில் பல வருடங்கள் பயணித்த எம்.ஜி.ஆர் கலைஞர் கருணாநிதியுடன் கருத்து மோதல் ஏற்பட்டு அதிமுக என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து முதலமைச்சராக இருந்தார். 1987ம் வருடம் டிசம்பர் 24ம் தேதி அவர் மரணமடைந்தார்..
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதிய கவிஞர் புலமைப்புத்தன் சில வருடங்களுக்கு முன்பு கொடுக்க பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆரை பற்றிய ஒரு முக்கிய தகவலை பகிர்ந்திருந்தார்..
எம்.ஜி.ஆர் மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு தன்னை வந்து சந்திக்குமாறு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. என் மனைவியை அழைத்துக் கொண்டு அவரின் வீட்டுக்கு சென்றேன். ஒரு சாதாரண கட்டிலில் தொளதொளவென ஒரு ஆடை அணிந்து கொண்டு அமர்ந்திருந்தார். அவரின் கைகள் நீலம் பூத்திருந்தன.. கால்கள் வீங்கியிருந்தன.. காலை 10.30 மணி இருக்கும். ஊருக்கெல்லாம் சாப்பாடு போட்ட எம்.ஜி.ஆர் சாப்பிடாமல் இருந்தார்.
அவரின் நிலையை பார்த்ததும் என் மனம் வேதனைப்பட்டது. ‘நான் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன்.. வந்த பிறகு உங்களுக்கு ஏதாவது செய்கிறேன்’ என்று என்னிடம் கூறினார். நான் ‘எனக்கு நீங்க எதுவும் செய்யத் தேவையில்லை.. ஒரு சாதாரண கூலித்தொழிலாளியாக இருந்த என்னை பாடலாசிரியர் ஆக்கி என்னை வளர்த்து விட்டீர்கள். அதுவே போதும்.. ஆனால், நீங்கள் எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினேன்.
‘என்ன?’ என்று கேட்டார்.. ‘நீங்கள் அமெரிக்கா சென்று நல்லபடியாக சிகிச்சை செய்து உடல் நலத்துடன் திரும்பி வர வேண்டும்.. அதுதான் எனக்கு நீங்கள் செய்யும் உதவி’ என்றேன்.. உடனே அவர் அழத்தொடங்கி விட்டார்.. அவரை அப்படியே என் தோள்களில் சாய்த்து கொண்டேன்.. எம்.ஜி.ஆர் அழுது முதன்முதலாக நான் அப்போதுதான் பார்த்தேன்’ என்று உணர்ச்சி பொங்க அவர் பேசியிருக்கிறார். கவிஞர் புலமைப்பித்தன் கடந்த 2021ம் வருடம் காலாமனது குறிப்பிடத்தக்கது.
