நான் எழுதிய பாட்டு தப்பா?.. கண்ணதாசனை வாயடைக்க வைத்த வாலி!..
கண்ணதாசனுக்கு பின் தமிழ் திரையுலகில் முக்கிய பாடலாசிரியராக திகழ்ந்தவர் கவிஞர் வாலி. இன்னும் சொல்லப் போனால் கண்ணதாசனுக்கு போட்டியாகவே இவர் பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார். கவிஞர் வாலி எழுதிய பல பாடல்களை பலரும் கண்ணதாசன்தான் எழுதியது என நினைத்த காலமும் உண்டு.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் என 60களில் முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்படங்களிலும் வாலி பாடல்களை எழுதியிருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர் பொருந்துவது போல நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார். எம்ஜிஆர் தன்னை அரசியல்ரீதியாக மக்களிடம் புரமோட் செய்வதற்கு வாலியின் பாடல்கள் பெரிதும் உதவியது. அதோடு எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் வாலி இருந்திருக்கிறார்.
இந்நிலையில்தான், ஒரு பேட்டியில் ஒரு சம்பவத்தை கவிஞர் வாலி பகிர்ந்திருக்கிறார். எம்.எஸ்.வி இசையில் உருவான ஒரு பாடலில் ‘அவன் ஒரு நிலவு’ என எழுதி விட்டேன். ‘ஒரு ஆணை எப்படி வாலி நிலவு என வர்ணித்து எழுதியிருக்கிறான். இது அபத்தம்’ என கண்ணதாசன் எம்.எஎஸ்.வி-யிடம் கேட்டிருக்கிறர். இதை எம்.எஸ்.வி என்னிடம் சொன்ன போது ‘அவரிடம் நான் இதற்கு பதில் சொல்லிக் கொள்கிறேன்’ என சொல்லி விட்டேன்.
சில நாட்களில் நான், எம்.எஸ்.வி, கண்ணதாசன் ஆகிய மூவரும் இயக்குனர் ஸ்ரீதரின் அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போது நான் சந்திரன் ஏன் ஆண்பால் என்பதற்கு புராண ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் விளக்கம் கொடுக்கிறேன். ‘நீங்க குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே அகஸ்தியர் கோவில் இருக்கு.. அங்க போய் பாருங்கள்.. அங்கே நவகிரகங்கள் இருக்கு.. சந்திரனுக்கு பஞ்சகச்சம் கட்டி வைத்திருப்பார்கள்.. சந்திரனின் மனைவி ரோகினி.. தாரை என இன்னொரு மனைவியும் உண்டு
இதெல்லாம் விட்ருங்க.. விஞ்ஞான ரீதியா பார்ப்போம்.. மலர்தல் என்கிற தன்மை பெண்ணுக்குதான் உண்டு.. சந்திரனை பார்த்து அல்லி மலர்கிறது.. அப்படி என்றால் இயற்கையாகவே சந்திரன் ஆண்தான்.. புராணத்திலும் ஆண்பால்.. சினிமாவிலும் ஆண் பால்’ என்று சொல்ல ‘என்ன விட்ருய்யா.. உன்கிட்ட எதுவும் கேட்கமாட்டேன்’ என கையெடுத்து கும்பிட்டார் கண்ணதாசன்’ என சொல்லியிருக்கிறார்.
