ஹிட் படங்களை மிஸ் பண்ணேன்!. என்னோட கெட்ட காலம்!.. சக்தி வாசு உருக்கம்!..
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கிய பி.வாசுவின் மகன் சக்தி. குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். தொட்டால் பூ மலரும் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், ஏதோ செய்தாய் என்னை, தற்காப்பு, சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பிரபலமான இயக்குனரின் மகனாக இருந்தும் சக்தி வாசுவால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. எனவே ஒரு தோல்வியடைந்த ஒரு நடிகராகவே சக்தி வாசு பார்க்கப்படுகிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார்..
அனலி என்கிற திரைப்படத்தில் வில்லனாக சக்தி வாசு நடித்திருக்கிறார். இந்த படத்தில் சக்தி வாசுவின் தோற்றத்தை கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்தார்கள். இதையடுத்து ஜிம்மில் தான் வொர்க் அவுட் பண்ணும் வீடியோவை பகிர்ந்து ‘இது கராத்தே பாபு படத்திற்காக.. என்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நன்றி.. அதுதான் என்னை உத்வேகம் கொள்ள செய்தது.. மீண்டு வருவேன்.. என் புதிய தோற்றத்தை பாருங்கள்’ என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சக்தி வாசு ‘நல்ல வாய்ப்புகள் வந்த போது அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 2006ம் வருடம் சமுத்திரக்கனி சார் என்னை கூப்பிட்டார்.. அதேபோல் ஷங்கர் சார் பாய்ஸ் படத்தை எடுத்த போது அந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்குமாறு அர்ஜுன் சார் கூறினார்.. ‘நான் சொல்கிறேன்.. நீ போய் பார்’ என்று சொன்னார்.
ஆனால், அப்போது நான் மிகவும் குண்டாக இருந்தேன். எனவே பயந்து கொண்டு செல்லவில்லை.. அதேபோல் களவாணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் முதலில் எனக்குதான் வந்தது. அதேபோல் ஆயிரம் விளக்கு நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களின் வாய்ப்பும் எனக்கு வந்தது. அவையெல்லாம் சிறந்த கதைகள். அப்போது பக்குவம் இல்லாத காரணத்தினாலும், என்னை சிலர் தவறாக வழிநடத்தியதாலும் அந்த வாய்ப்பை இழந்தேன்.. அது என்னுடைய கெட்ட நேரம்.. இல்லையென்றால் அந்த படங்களில் நான் நடித்திருப்பேன்’ என ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.
