அவ்ளோ சூப்பரா போட்டி போட்டு நடித்தும்... மண்ணைக் கவ்விய சிவாஜி படம்!
தமிழ்த்திரை உலகம் சில நேரங்களில் விசித்திரமான சில சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது. சில படங்கள் வந்த புதிதில் பெரிய அளவில் பேசப்படாது. ஆனால் அது நாளடைவில் பெரிய அளவில் பேசப்படும். கமல்ஹாசனின் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். குணா படம் இந்த ரகம் தான். சிவாஜி படமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவரது படமும் அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் மாமேதைகள் பங்குபெற்ற படம். அதைப் பற்றிப் பார்ப்போமா...
பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியத்தைப் படைத்த கல்கி எழுதிய முதல் கதை கள்வனின் காதலி. அதை ஆனந்த விகடனில் தொடர்கதையாக எழுதினார். நாடகமாக நடத்தியபோது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து ரேவதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராகவன் இயக்கத்தில் அதைத் திரைப்படமாக தயாரித்தனர்.
சிவாஜியும், பானுமதியும் சேர்ந்து நடித்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம் இதுதான். கோவிந்தராஜூலு நாயுடுவும், கண்டசாலாவும் மிகச்சிறப்பாக இசை அமைத்து இருந்தனர். சிவாஜியும், பானுமதியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். அப்படி இருந்தும் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
