உயர்ந்த மனிதன் படத்தில் நடித்த சிவாஜியின் பெருந்தன்மை... உண்மையிலேயே மனிதர் உயர்ந்தவர்தான்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தலைவிரித்து ஆடும் ஒரு விஷயம் ஆணவம்தான். இது படிக்காதவர்களை விட படித்தவர்களுக்கு அதிகம் உண்டு. அதை வித்யா கர்வம்னு சொல்வார்கள். நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை சந்தித்து வருகிறோம். யார் யாருக்கு என்னென்ன கர்வம் உண்டு? நமக்கு அது எப்படி உள்ளது? ஆணவம் எப்படி எல்லாம் கண்ணை மறைக்கிறது. அதன்பிறகு என்னென்ன பின்விளைவுகளை உண்டாக்குகிறது என்று நாம் அறிவோம்.
அதன் பின்விளைவுகளை நாம் சந்திக்கும்போதுதான் அடடா நாம தப்பு செஞ்சிட்டோமே என ஃபீல் பண்ணுவோம். ஆனால் அதன்பிறகு சிறிது காலம் கடந்ததும் மீண்டும் ஆணவம் நம் கண்ணை மறைக்க முன்வரும். அப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். ஆனால் உயர்ந்த மனிதர்கள் எப்போதுமே உயர்ந்த மனிதர்கள்தான் என்பதையே இந்த சம்பவம் நமக்கு எடுத்துரைக்கிறது. அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி எப்படி நிஜ வாழ்க்கையிலும் உயர்ந்த மனிதராகத் திகழ்ந்தார்னு பார்க்கலாமா...
உயர்ந்த மனிதன் படத்துக்கு அப்புறம் சிவாஜிகணேசனும், அசோகனும் இணைந்து நடிக்கலையே. இதுக்கு என்ன காரணம்னு ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் சொல்கிறார். உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்கும்போதே சிவாஜிகணேசனுக்கும், அசோகனுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அந்தப் படத்தில் அசோகன் நடிப்பதில் சிவாஜிக்கு உடன்பாடு இல்லை.
உயர்ந்த மனிதன் படத்திற்கு சிவாஜியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னாலேயே அசோகனை ஒப்பந்தம் செய்து விட்டதாக ஏவிஎம்.சரவணன் சொன்னாராம். அப்படி இருந்தும் எந்த மறுப்பும் சொல்லாமல் சிவாஜி இந்தப் படத்தில் நடித்தார் என்பதுதான் உண்மை என்கிறார் சித்ரா லட்சுமணன்.
