சிவாஜிக்கு தான் என்ற ஆணவம் எப்போதாவது வந்ததா? பிரபல தயாரிப்பாளர் சொன்ன 'நச்' பதில்!
நடிகர் திலகம் சிவாஜியை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். அவர் ஒரு நடிப்புச் சக்கரவர்த்தி. நடிப்பு அகராதின்னு சொல்லிக் கொண்டே போகலாம். அப்பேர்ப்பட்ட திறமைசாலியான அவருக்கு என்னைக்காவது நான் என்ற ஆணவம் இருந்தது உண்டா என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதோ.
தான் ஒரு உச்ச நடிகர் என்ற எண்ணம் ஒரு சதவீதம் கூட இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் இருந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த காலகட்டத்தில தீவிரமான சிவாஜி ரசிகன். அப்படிப்பட்ட நான் அவரை வைத்து 2 படங்கள் தயாரிக்க முடிந்தது. அவருக்கு தான் என்ற எண்ணம் இருந்து இருந்தால் அது நடந்துருக்குமா? என்ற சித்ரா லட்சுமணன் அவரைப் பற்றிய இன்னொரு சுவாரசிய தகவலையும் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சங்க கட்டடத்துக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெயர் வைப்பதுதான் சரியாக இருக்கும். அதுக்கு காரணம் அவர் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம் என்பதோ, சிறந்த நடிகர் என்பதாலோ இல்லை. அந்த இடத்தில் முதன்முதலாக நடிகர் சங்க கட்டடம் எழுப்ப காரணமாக இருந்தவரே அவர் தான். அதனால் அந்த கட்டடத்துக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
